இஸ்லாமிய மார்க்கத்தில் 'மீலாது விழாப் பெருநாள்' என்று அழைக்கப்படும் எந்தவொரு கொண்டாட்டமும் கிடையாது. நபியவர்களின் தோழர்களோ, அவர்களுக்குப் பின்வந்த தாபியீன்களோ, நான்கு(மத்கப்களின்) பெரும் இமாம்களோ அல்லது அவர்கள் அல்லாத வேறு மார்க்க அறிஞர்களோ தங்களது மார்க்கத்தில் இத்தகையதொரு நாளைப் பற்றி அறிந்திருக்கக் கூட இல்லை.
உண்மையில், இந்தத் திருவிழாவானது வழிகெட்ட பாத்தினியக் கொள்கையைச் சேர்ந்த சில அறிவிலிகளாலேயே தோற்றுவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, மக்கள் இந்த பித்அத்தை அப்படியே தொடர்ந்து பின்பற்றி வரத் தொடங்கினர். இருப்பினும், அனைத்துக் காலங்களிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள மார்க்க இமாம்கள் இப் புதுமையைத் தொடர்ந்து கண்டித்துத் தடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
இந்த மார்க்கப் புதுமையின் வெறுக்கத்தக்கத் தன்மை குறித்த விரிவான விபரங்கள், ஏற்கனவே எமது இணையதளத்தில் கேள்வி எண்கள்: (10070), (13810) மற்றும் (20889) ஆகியவற்றுக்கான பதில்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது: இதன் அடிப்படையில், இந்த (மீலாது) நாளுக்காக மக்கள் பிரத்தியேகமாகச் செய்யக்கூடிய அனைத்துச் செயல்பாடுகளும், மார்க்கத்தில் தடுக்கப்பட்ட மற்றும் புதிதாக உண்டாக்கப்பட்ட புதுமைகளாகவே (பித்அத்களாகவே) கருதப்படும். ஏனெனில், அவர்கள் விழாக்களை நடத்துவது, உணவளிப்பது போன்ற காரியங்களின் மூலம், நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு புதிய பெருநாளை உயிர்ப்பிக்கவே முனைகிறார்கள்.
ஷைக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் அவர்கள் தங்களது 'அல்-பயான் லிஅஹ்தாஇ பஃழில் குத்தாப்' (பக்கம்:268-270) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
"அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த மார்க்கத்தைப் பின்பற்றி நடக்குமாறு கட்டளையிடக்கூடிய, மார்க்கத்தில் புதிய புதுமைகளைப் புகுத்துவதை விட்டும் தடுக்கக்கூடிய எவ்வளவு ஆதாரங்கள் குர்ஆனிலும் சுன்னாவிலும் வந்துள்ளன என்பது யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும். அல்லாஹ் தன் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்: {(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்' (ஆலு இம்ரான்:31). மேலும் அல்லாஹ் கூறுகிறான்: {உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்; அவனையன்றி வேறு பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்; (எனினும், இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவுதான்} (அல்-அஃராஃப்: 03). மேலும் அல்லாஹ் கூறுகிறான்: {நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான பாதையாகும்; எனவே, இதையே பின்பற்றுங்கள். வேறு (தவறான) பாதைகளைப் பின்பற்றாதீர்கள்; அவை உங்களை அவனுடைய பாதையை விட்டும் பிரித்துவிடும்}(அல்அன்ஆம்: 153).
மேலும் நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்: [நிச்சயமாகப் பேச்சுகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும்; வழிகாட்டல்களில் மிகச் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும்; காரியங்களில் மிகக் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவைகளாகும்] (ஸஹீஹ் முஸ்லிம்). மேலும் நபியவர்கள் கூறினார்கள்: [நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாத ஒன்றை யாராவது புதிதாக உண்டாக்கினால், அது நிராகரிக்கப்படும்'] (ஸஹீஹுல் புகாரி). முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்: [எவர் ஒருவர் நம்முடைய கட்டளையில் இல்லாத ஒரு செயலைச் செய்கிறாரோ, அது நிராகரிக்கப்படும்' என்று வந்துள்ளது.]
மக்கள் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கிய வெறுக்கத்தக்க புதுமைகளுள் ஒன்றுதான், ரபியுல் அவ்வல் மாதத்தில் நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறந்தநாள் நினைவைக் கொண்டாடுவதாகும். இந்த விழாவைக் கொண்டாடுவதில் மக்கள் பல வகைகளாகப் பிரிந்துள்ளனர்:
- சிலர், இதனை வெறும் ஒரு ஒன்றுகூடலாக மட்டுமே நடத்துகின்றனர்; அதில் நபியவர்களின் பிறந்தநாள் பற்றிய கதைகள் வாசிக்கப்படுகின்றன அல்லது இந்த நிகழ்வையொட்டி உரைகளும் கவிதைகளும் அரங்கேற்றப்படுகின்றன.
- இன்னும் சிலர், உணவுகளையும் இனிப்புகளையும் தயாரித்து, அங்கு வந்திருப்பவர்களுக்கு வழங்குகிறார்கள்.
- சிலர் இதனைப் பள்ளவாசல்களில் நடத்துகிறார்கள்; இன்னும் சிலர் தங்களது வீடுகளில் நடத்துகிறார்கள்.
- வேறு சிலரோ, மேற்சொன்ன காரியங்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், இந்தக் கூட்டத்தில் ஆண், பெண் கலப்பு, ஆடல், பாடல் போன்ற மார்க்கத்தால் விலக்கப்பட்ட தீமைகளையும் உள்ளடக்குகிறார்கள். அல்லது நபியவர்களிடம் நேரடியாகத் தங்களது தேவைகளைக் கோரிப் பிரார்த்திப்பது, அவர்களை அழைத்துப் பிரார்த்திப்பது மற்றும் எதிரிகளுக்கு எதிராக அவர்களிடமே உதவி தேடுவது போன்ற இணைவைப்புக் காரியங்களையும் செய்கிறார்கள்.
இந்தக் கொண்டாட்டம் அதன் அனைத்து வடிவங்களிலும், பல்வேறு நிலைகளிலும் மற்றும் இதனைச் செய்பவர்களின் வெவ்வேறான நோக்கங்களைக் கொண்டிருந்தாலும் அது சிறந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஸலஃபுகளுக்குப் பிறகு பல காலங்கள் கழித்து மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட தடுக்கப்பட்ட ஒரு புதுமையே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வரலாற்று ஆசிரியர்களான இப்னு கஸீர், இப்னு கல்லிகான் மற்றும் பலர் குறிப்பிட்டுள்ளபடி, இந்த விழாவை முதன்முதலில் தோற்றுவித்தவர் ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திலோ வாழ்ந்த 'இர்பில்' (Erbil) நாட்டின் மன்னரான முளஃப்பர் அபூ ஸயீத் கவ்கபூரி என்பவராவார்.
இமாம் அபூ ஷாமா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: 'மவ்ஸில்' (Mosul) நகரில் முதன்முதலில் இதனைச் செய்தவர், புகழ்பெற்ற நல்லடியார்களுள் ஒருவராகக் கருதப்பட்ட ஷைக் உமர் பின் முஹம்மது அல்-முல்லா என்பவராவார்; அவரைப் பின்பற்றியே இர்பில் நாட்டின் மன்னரும் மற்றவர்களும் இக்கொண்டாட்டத்தைத் தொடங்கினர்.
இமாம் இப்னு கஸீர் 'அல்-பிதாயா வந்-நிஹாயா' எனும் தனது நூலில், மன்னர் அபூ ஸயீத் கவ்கபூரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி கூறும் பொழுது:அவர் ரபியுல் அவ்வல் மாதத்தில் இந்த மீலாது விழாவை ஏற்பாடு செய்து, அதனை மிக பிரமாண்டமான முறையில் கொண்டாடி வந்தார்... என்று கூறிவிட்டு ....தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறார்...
"இமாம் இப்னுல் ஜவ்ஸியின் பேரனான 'அஸ்ஸிப்த்' பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'மன்னர் முளஃப்பரின் அந்த மீலாது விழா விருந்துகளில் கலந்து கொண்ட சிலர் நமக்குக் கூறியதாவது: அவர் (அபூ ஸயீத் கவ்கபூரி ) அந்தப் பிரமாண்டமான விருந்து மேசையில் ஐந்தாயிரம் சுடப்பட்ட ஆடுகளின் தலைகளையும், பத்தாயிரம் கோழிகளையும், ஒரு லட்சம் தயிர்க் கிண்ணங்களையும் மற்றும் முப்பதாயிரம் இனிப்புத் தட்டுகளையும் கொண்டு வந்து பரத்தி வைப்பார்...' என்று கூறிவிட்டு, மேலும் கூறுகிறார்: 'அவர் சூஃபிகளுக்காக ளுஹர் தொழுகையிலிருந்து ஃபஜ்ர் வரை தொடர்ச்சியான இசை அமர்வுகளை ஏற்பாடு செய்வார்; மேலும், அவரே நேரடியாக அவர்களுடன் இணைந்து நடனமாடுவார்” (நூல்: அல்-பிதாயா வந்-நிஹாயா:13/137).
"இமாம் இப்னு கல்லிகான் தங்களது 'வஃபயாதுல் அயான்' (பாகம்: 3, பக்கம்: 274) என்ற வரலாற்று நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
“ஸஃபர் மாதத்தின் முதல் நாள் வந்துவிட்டால், அவர்கள் அந்தப் பிரமாண்டமான மேடைகளை மிகவும் ஆடம்பரமான மற்றும் பளபளப்பான பலதரப்பட்ட அலங்காரப் பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கத் தொடங்கிவிடுவார்கள். மேலும், ஒவ்வொரு மேடையிலும் பாடகர்களின் ஒரு குழுவும், நிழற்படக் கூத்து காட்டும் கலைஞர்களின் ஒரு குழுவும் மற்றும் பலதரப்பட்ட இசைக் கலைஞர்களின் ஒரு குழுவும் அமர வைக்கப்படுவர். அவர்கள் அந்தக் மேடைகளின் அடுக்கு வரிசைகளில் எவ்வித அடுக்குகளையும் விட்டுவைக்காமல், அவை அனைத்திலும் ஒரு கலைக் குழுவை வரிசையாக முறைப்படுத்தி அமர வைத்திருப்பார்கள்.
எனவே, இந்த மார்க்கப் புதுமையை நடைமுறைப்படுத்தும் வழிகேடர்கள் இந்த நாளை உயிர்ப்பிப்பதற்காகச் செய்யக்கூடிய மிகப் பெரும் செயல் என்னவென்றால்: பலதரப்பட்ட மற்றும் விதம் விதமான உணவுகளைத் தயாரித்து, அவற்றை விநியோகிப்பதும், மக்களை அதற்கு அழைப்பதுமே ஆகும். நிலைமை அவ்வாறிருக்க, ஒரு முஸ்லிம் இவர்களது இந்தச் செயலில் பங்கெடுத்து, அவர்களது உணவை உண்பதோ அல்லது அவர்களது அந்த விருந்து மேசைகளில் அமர்வதோ—நிச்சயமாக அவரும் அந்த மார்க்கப் புதுமையை உயிர்ப்பிப்பதில் பங்காளியாக மாறுவதற்கும், அதனை நிலைநிறுத்த உதவி செய்வதற்கும் சமமாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்: {நன்மைக்கும் பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திற்கும் வரம்பு மீறலுக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளாதீர்கள்} (அல்-மாயிதா: 02).
இதன் காரணமாகவே, இந்த மீலாது நாளிலும் மற்றும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட இதர பிற பெருநாட்களிலும் விநியோகிக்கப்படும் உணவுகளை உட்கொள்வது முற்றிலும் ஹராமானது என மார்க்க அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகள் தெளிவாக வந்துள்ளன.
ஷைக் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம்நூலில் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது: (மஜ்மூஃ ஃபதாவா' (பாகம்: 9, பக்கம்: 74):
மீலாது விழா கொண்டாட்டத்திற்காக அறுக்கப்படும் பிராணிகளின் மார்க்க நிலைப்பாடு என்ன?
அதற்கு ஷைக் அவர்கள் (ரஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு பதிலளித்தார்கள்:
“அந்தப் பிராணியானது யாருக்காக பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறதோ, அந்த நபரைத் திருப்திப்படுத்துவதற்காக அறுக்கப்பட்டிருந்தால், அது மார்க்கத்தை விட்டே வெளியேற்றக்கூடிய மிகப் பெரும் இணைவைப்பாகும். மாறாக, அது வெறும் வந்திருப்பவர்கள் உண்பதற்காக மட்டுமே அறுக்கப்பட்டிருந்தால், அந்தப் பிராணி அறுக்கப்பட்ட முறையில் எவ்விதத் தவறும் இல்லை. இருப்பினும், ஒரு முஸ்லிம் தங்களது சொல்லாலும் செயலாலும் அவர்களின் இந்த பித்அத்தை நிராகரிக்கும் முகமாக, அந்த உணவை உட்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்; மேலும், அத்தகைய சபைகளில் கலந்துகொள்ளவும் கூடாது. ஆனால், அவர்களின் இந்தச் சடங்குகளில் பங்கெடுக்காமல், அவர்களுக்கு நல்லுபதேசம் கூறி நேர்வழி காட்டுவதற்காக மட்டுமே ஒருவர் அங்கு செல்வதாக இருந்தால், அது விதிவிலக்காகும்.”
மேலும், இது தொடர்பான சில மார்க்கத் தீர்ப்புகள் (ஃபதாவாக்கள்) ஏற்கனவே எமது இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளன; எனவே, கூடுதல் விபரங்களுக்குக் கேள்வி எண்கள்: (7051) மற்றும் (9485) ஆகியவற்றுக்கான பதில்களைப் பார்வையிடலாம்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.