பாட்டு, இசை மற்றும் மார்க்கத்தால் விலக்கப்பட்ட தீமைகள் ஏதுமின்றி, நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறந்தநாளைக் கொண்டாடுவதன் மார்க்கச் சட்டம்.

கேள்வி 148053

இங்கு ஸ்பெயின் நாட்டில் நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறந்தநாள் நினைவைக் கொண்டாடுவதை பொருத்தமட்டில், அந்நிகழ்வை நமது குடும்ப ஒன்றுகூடலாகவும், சகோதரத்துவத்தைப் பேணும் நோக்கிலும் மற்றும் நமது பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அறிவுமகமாகிக்கொள்ளவும் அவர்களுக்கு மத்தியிலான சகோதரத்துவத்தை பேணிக் கொள்வதற்கும் மற்றும் அவர்களுடைய மார்க்கத்தின் மகிமையை அவர்களுக்கு உணர்த்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக மட்டுமன்றி இங்கே அன்னியர்கள் எமது பிள்ளைகளை மாசுபடுத்துவதற்காக நடத்தும் கார்னிவேல்(carnival) நிகழ்வுகள் மற்றும்  காதலர் தின நிகழ்வுகள் போன்றவற்றை விட்டும் அவர்களை பாதுகாக்கும் நோக்கிலேயும் தான்  இவ்வாறன நிகழ்வுகளை நடத்துகிறோம்.(அதன் சட்டம் என்ன?).

Summary of answer

"குடும்பங்களை ஒன்று சேர்த்தல், நற்போதனைகள் வழங்குதல் மற்றும் வழிகாட்டுதல் போன்ற நீங்கள் குறிப்பிட்ட அந்த நல்ல நோக்கங்களுக்காக, மார்க்கத்தில் ஆதாரமில்லாத அந்தப் புதுமையான (பித்அத்தான) நாளில் நீங்கள் ஒன்று கூடுவது மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக, இத்தகைய உன்னதமான குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு அந்த நாளைத் தவிர்த்து வேறு நாட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இத்தகைய நற்கூட்டங்களை நடத்துவதற்கென வருடம் முழுவதும் ஏராளமான நாட்கள் உள்ளன; எனவே, வருடத்தின் ஏதேனும் ஒரு சாதாரண நாளில் உங்களது இக்கூட்டங்களை நீங்கள் தாராளமாக நடத்திக் கொள்ளலாம். நன்மையை நாடிய உங்களது இந்த உன்னதமான முயற்சிக்கு அல்லாஹ் வெற்றியைத் தர வேண்டுமென்றும், உங்களது நேர்வழியையும் மார்க்க உறுதியையும் அவன் இன்னும் அதிகமாக்க வேண்டுமென்றும் நாம் அவனிடம் பிரார்த்திக்கிறோம்.

சம்பந்தப்பட்ட தலைப்புகள்

பதில்

முதலாவது: நபியவர்கள்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறந்த தேதியைக் குறித்து, வரலாற்று ஆசிரியர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடு.

நபியவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறந்த தேதியைக் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர்; ஆனால், அவர்களின் மரணம் ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதம் 12 ஆம் நாள் நிகழ்ந்தது என்பதில் அவர்கள் அனைவரும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர்! அந்த நாளைத்தான், இன்று மக்கள் ‘நபியவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்’ என்று பெயரிட்டு கொண்டாடுகின்றனர்.

இது குறித்த விரிவான விளக்கங்களுக்குக் கேள்வி எண்- 125690 க்கான பதிலைப் பார்வையிடவும்.

இரண்டாவது: மீலாது விழா கொண்டாடுவது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு காரியமே (பித்அத்) தவிர, அதற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.

இஸ்லாமிய மார்க்கத்தில் 'மீலாது விழாப் பெருநாள்' என்று அழைக்கப்படும் எந்தவொரு கொண்டாட்டமும் கிடையாது. நபியவர்களின் தோழர்களோ, அவர்களுக்குப் பின்வந்த தாபியீன்களோ அல்லது அவர்களுக்குப் பின்வந்த இஸ்லாமிய இமாம்களோ இத்தகையதொரு நாளைப் பற்றி அறிந்திருக்கக் கூட இல்லை; அப்படியிருக்க, அவர்கள் இதனைப் பெருநாளாகக் கொண்டாடுவதைப் பற்றிப் பேசவே வேண்டியதில்லை. உண்மையில், இந்தத் திருவிழாவானது  பாத்தினியக் கொள்கையைச் சேர்ந்த சில அறியாமைமிக்க வழிகேடர்களாலேயே தோற்றுவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, பல நாடுகளைச் சேர்ந்த பாமர மக்கள் இப் புதுமையை (பித்அத்தை) அப்படியே தொடர்ந்து பின்பற்றி வரத் தொடங்கினர்.

இந்தக் கொண்டாட்டம் மார்க்கப் புதுமைகளில் (பித்அத்களில்) ஒன்று என்பதற்கான விரிவான விளக்கங்கள், ஏற்கனவே எமது இணையதளத்தில் கேள்வி எண்கள்: (10070) மற்றும் (13810) ஆகியவற்றுக்கான பதில்களில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

மூன்றாவதாக: சுன்னாவின் மீது பற்றுள்ள சிலர், நாட்டில் நடக்கும் மீலாது விழா கொண்டாட்டங்களால் ஈர்க்கப்பட்டு, பித்அத்தில் விழுவதிலிருந்து தப்பிக்க தங்களது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் கூடி சிறப்பு உணவு சமைத்து உண்கிறார்கள். மேலும், சிலர் நபி (ஸல்) அவர்களின் சீறாவை வாசிக்க அல்லது மார்க்கச் சொற்பொழிவுகளுக்காக மக்களை ஒன்று திரட்டவும் முற்படுகின்றனர்.

அதேபோன்றதுதான்,  நீங்கள் குறிப்பிட்ட உங்களது அந்த நல்ல நோக்கமும் இதற்குள் அடங்கும்; அதாவது, நீங்கள் வாழும் அந்த அந்நிய (இறைமறுப்பு நிலவும்) தேசத்தில் குடும்பங்களை ஒன்று சேர்ப்பதும், மார்க்கத்தின் மீதான பெருமித உணர்வை (பிள்ளைகளின் நெஞ்சங்களில்) உயிர்ப்பிப்பதும் ஆகும்.

"ஆனால் யதார்த்தம் என்னவென்றால்: இவை போன்ற உங்களுடைய எந்தவொரு நல்ல நோக்கமும் (நிய்யத்தும்) மார்க்கத்தில் புதிதாக உட்புகுத்தப்பட்ட அந்த நாளில் நீங்கள் ஒன்று கூடுவதை மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்டதாக மாற்றிவிடாது; மாறாக, அது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு மார்க்கப் புதுமையே (பித்அத் முன்கர்) ஆகும்.

உங்களுக்குக் கொண்டாடுவதற்கு ஒரு பெருநாள் வேண்டுமென்றால், இஸ்லாமியர்களாகிய நமக்கு நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் ஆகிய இரண்டு பெருநாட்கள் உள்ளன. அதைவிடவும் கூடுதல் கொண்டாட்டங்கள் உங்களுக்குத் தேவைப்பட்டால், நமக்கு வாராந்திரப் பெருநாளான வெள்ளிக்கிழமை நாள் உள்ளது. எனவே, அந்த ஜுமுஆ நாளில் நீங்கள் ஒன்று கூடி, ஜுமுஆத் தொழுகையை நிறைவேற்றுங்கள்; அத்துடன், மார்க்கத்தின் மீதான பெருமித உணர்வை உயிர்ப்பிப்பதற்கும் அந்த நாளையே பயன்படுத்துங்கள்.

"ஒருவேளை இவைகள் உங்களுக்குச் சாத்தியமாகவில்லை என்றால், வருடத்தின் இதர நாட்கள் ஏராளமாக உள்ளன. மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட ஒரு பெருநாளைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஒரு நிகழ்வில் நீங்கள் தாராளமாக ஒன்று கூடலாம். உதாரணத்திற்கு, ஒரு திருமண விழா, ஒரு சாதாரண விருந்து, ஒரு குழந்தைக்கான அகீகா நிகழ்ச்சி அல்லது ஏதேனும் ஒரு நற்செய்திக்காக வாழ்த்துத் தெரிவிக்கும் சபை போன்ற அனுமதிக்கப்பட்ட விவகாரங்களைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பரஸ்பர உறவுகளைப் பேணல், குடும்பங்களை ஒன்று சேர்த்தல் மற்றும் மார்க்கத்தில் உறுதியாக இருத்தல் போன்ற உன்னதமான மார்க்க உணர்வுகளை உயிர்ப்பிப்பதற்கு இவை போன்ற அனைத்து நிகழ்வுகளையுமே நீங்கள் சிறந்ததொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நாளில், மேற்சொன்ன நல்ல நோக்கங்களுக்காக ஒன்று கூடுபவர்களின் மார்க்கச் நிலைப்பாடு குறித்து,  சில மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) வழங்கிய மார்க்கத் தீர்ப்புகள் இதோ:

  1. இமாம் அபூ ஹஃப்ஸ் தாஜுத்தீன் அல்-ஃபாகிஹானி: “தன் சொந்த நிதியில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவருந்தி, பாவச் செயல்கள் ஏதுமின்றி நடத்தப்படும் மவ்லிதை, ஸலஃபுகள் செய்யாத வெறுக்கத்தக்க பித்அத் என விளக்குகிறார். இந்த நடைமுறை, இஸ்லாமிய சட்ட வல்லுநர்கள் மற்றும் முன்மாதிரியான அறிஞர்களின் காலக்கட்டத்தில் காணப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். (நூல்: அல்-மவ்ரித் ஃபீ அமலில் மவ்லித், பக்கம்: 5).
  2. இமாம் இப்னுல் ஹாஜ் அல்-மாலிகி (ரஹிமஹுல்லாஹ்)அவர்கள் இசைக்கருவிகள், ஆடல், பாடல் மற்றும் ஆண்களும் பெண்களும் கலந்திருப்பது போன்ற மார்க்கத்தால் விலக்கப்பட்ட தீமைகள் ஏதுமின்றி நடத்தப்படும் மீலாது விழாவின் மார்க்கச் நிலைப்பாடு குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

ஒருவேளை இந்த விழா மேற்குறிப்பிட்டவாறு பாவங்கள் ஏதுமின்றி, வெறும் உணவளிப்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டாலும், அதனை நடத்துபவர் தனது உள்ளத்தில் 'இது மீலாது விழா (மவ்லித்)' என்ற அந்த ஒரு நிய்யத்தை (எண்ணத்தை) வைப்பதன் காரணமாகவே அது ஒரு மார்க்கப் புதுமையாக (பித்அத்) மாறிவிடுகிறது. ஏனெனில், இத்தகைய செயல் மார்க்கத்தில் செய்யக்கூடிய ஒரு அதிகரிப்பாகும்; மேலும், இது நமக்கு முந்தைய நேர்மையான முன்னோர்களின் (ஸலஃபுஸ் ஸாலிஹீங்களின்) நடைமுறையும் அல்ல. அவர்கள் வாழ்ந்த அந்த உன்னதமான வழிமுறைக்கு முரணான ஒரு புதிய எண்ணத்தை மார்க்கத்தில் உருவாக்குவதை விட, அந்த ஸலஃபுகளைப் பின்பற்றி நடப்பதே நமக்கு மிகவும் தகுதியானதும், கட்டாயக் கடமையும் (வாஜிபும்) ஆகும். ஏனெனில், அவர்கள்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றுவதிலும், அவர்களைத் தங்களது உயிரை விட மேலாகக் கண்ணியப்படுத்துவதிலும் மனிதர்களிலேயே மிக அதீத ஆர்வம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். நற்காரியங்களை நோக்கி விரைந்து செல்வதில் அவர்களுக்கே முதலிடமும் முன்னுரிமையும் உண்டு. அப்படிப்பட்ட உன்னதச் சான்றோர்கள் எவரிடமிருந்தும், அவர்கள் 'மவ்லித்' என்று நிய்யத் வைத்து இத்தகைய விழாக்களை நடத்தினார்கள் என்று எவ்வித ஆதாரமும் பதியப்படவில்லை.

நாம் அனைவரும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் தான்; எனவே, அவர்களுக்கு எது போதுமானதாக இருந்ததோ, அதுவே நமக்கும் போதுமானதாகும். மார்க்கத்தின் மூலாதாரங்களை அணுகுவதிலும், அதிலிருந்து சட்டங்களை எடுப்பதிலும் அவர்களைப் பின்பற்றுவதே முறையான வழி என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். இதனை ஷேஃக் இமாம் அபூ தாலிப் அல்-மக்கீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களது நூலிலும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள் (நூல்: அல்-மத்ஃகல், பாகம்: 2, பக்கம்: 10).

  1. இமாம் இப்னுல் ஹாஜ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மேலும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

"இன்னும் சிலரோ, இத்தகைய மார்க்கத்தால் விலக்கப்பட்ட காரியங்களைத் (ஆடல், பாடல்களை) தவிர்ந்து கொள்வதாகக் கூறி, அதற்குப் பகரமாக 'ஸஹீஹுல் புகாரி' போன்ற ஹதீஸ் நூல்களை வாசித்து மீலாது விழாவை நடத்துகிறார்கள். நிச்சயமாக, ஹதீஸ்களை வாசிப்பது என்பது அல்லாஹ்விடம் நற்கூலியைப் பெற்றுத் தரக்கூடிய மிகப் பெரும் வழிபாடுகளுள் ஒன்றாகும்; மேலும், அதில் அளப்பரிய பரக்கத்தும் (அருளும்), ஏராளமான நன்மைகளும் நிறைந்துள்ளன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இருப்பினும், இந்த நற்செயல் அதற்கென மார்க்கம் விதித்துள்ள தகுதியான நிபந்தனைகளின்படி, முறையான இஸ்லாமிய வழிமுறையில்தான் செய்யப்பட வேண்டுமே தவிர, 'மீலாது விழா' (மவ்லித்) என்ற புதிய நிய்யத்தோடு செய்யப்படக் கூடாது. அல்லாஹ்விடம் நற்கூலியைப் பெற்றுத் தரக்கூடிய வழிபாடுகளிலேயே தொழுகை என்பது மிக உன்னதமான ஒன்றாகும் என்பதை நீங்கள் அறியவில்லையா? அப்படியிருந்தும், ஒரு மனிதன் அந்தத் தொழுகையை மார்க்கம் காட்டித் தராத வேறு ஒரு நேரத்தில் தொழுதால், அவன் கண்டிக்கப்பட வேண்டியவனாகவும், மார்க்க வரம்பை மீறியவனுமாகவே கருதப்படுவான். மார்க்கத்தில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையின் நிலையே இதுவென்றால், அதற்கு அப்பாற்பட்ட இதர சாதாரண நற்செயல்களின் நிலை என்னவாக இருக்கும்?!” (நூல்: அல்-மத்கல், பாகம்: 2, பக்கம்: 25).

கேள்வி எண் (117651)-க்கான பதிலைப் பார்வையிடவும்.

விடையின் சாராம்சம்: "குடும்பங்களை ஒன்று சேர்த்தல், நற்போதனைகள் வழங்குதல் மற்றும் வழிகாட்டுதல் போன்ற நீங்கள் குறிப்பிட்ட அந்த நல்ல நோக்கங்களுக்காக, மார்க்கத்தில் ஆதாரமில்லாத அந்தப் புதுமையான (பித்அத்தான) நாளில் நீங்கள் ஒன்று கூடுவது மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக, இத்தகைய உன்னதமான குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு அந்த நாளைத் தவிர்த்து வேறு நாட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இத்தகைய நற்கூட்டங்களை நடத்துவதற்கென வருடம் முழுவதும் ஏராளமான நாட்கள் உள்ளன; எனவே, வருடத்தின் ஏதேனும் ஒரு சாதாரண நாளில் உங்களது இக்கூட்டங்களை நீங்கள் தாராளமாக நடத்திக் கொள்ளலாம். நன்மையை நாடிய உங்களது இந்த உன்னதமான முயற்சிக்கு அல்லாஹ் வெற்றியைத் தர வேண்டுமென்றும், உங்களது நேர்வழியையும் மார்க்க உறுதியையும் அவன் இன்னும் அதிகமாக்க வேண்டுமென்றும் நாம் அவனிடம் பிரார்த்திக்கிறோம்.

மூலநூட்கள்

பித்ஆ

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

answer

சம்பந்தப்பட்ட தலைப்புகள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android