மீலாது விழா கொண்டாடும் மற்றும் அதில் பங்கேற்காததற்காக உங்களைக் குறை கூறிக் கேலி செய்யும் குடும்பத்தினருடன் எவ்வாறு நடந்து கொள்வது?

கேள்வி 125690

என்னுடைய குடும்பத்தில் என்னைத் தவிர அனைவரும் மீலாது விழா கொண்டாடுகிறார்கள்; இதன் காரணமாக அவர்கள், என்னுடைய இஸ்லாம் ஒரு 'புதிய இஸ்லாம்' என்றும், எனக்கு நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீது அன்பு இல்லை என்றும் கூறுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் உங்களுடைய உபதேபசம் என்ன?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

முதலாவது: கண்ணியமிக்க சகோதரரே! மக்களிடையே பரவலாகக் காணப்படக்கூடிய மார்க்கப் புதுமைகளில் (பித்அத்களில்) ஒன்றான இந்த மீலாதுவிழாக் கொண்டாட்டத்தை நீங்கள் தவிர்த்துக் கொண்டதன் மூலம் நிச்சயமாக ஒரு மிகச் சிறந்த காரியத்தையே செய்துள்ளீர்கள். எனவே, நீங்கள் நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வழிமுறையைப் பின்பற்றி நடப்பதைக் குறை கூறுபவர்களையோ, அல்லது இஸ்லாமிய நேர்வழியில் நீங்கள் உறுதியாக இருப்பதைக் கேலி செய்பவர்களையோ பற்றி நீங்கள் எவ்விதக் கவலையும் கொள்ள வேண்டாம். ஏனெனில், அல்லாஹ் தன் சமூகத்தாருக்கு அனுப்பிய தூதர்கள் அனைவரையுமே அச்சமூக மக்கள் கேலி செய்யாமல் இருந்ததில்லை; மேலும், அவர்களின் புத்தி கூர்மையிலும், அவர்களின் மார்க்கத்திலும் அவர்கள் குறை கூறாமல் இருந்ததில்லை. இதனை அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்: {இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் அல்லாஹ்வின் ஒரு தூதர் வரும்போதெல்லாம், அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்றே கூறுபவர்களாகவே இருந்தனர்}(அத்தாரியாத்:52). எனவே, அல்லாஹ்வின் தூதர்களின் வாழ்வில் உங்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரி உள்ளது. ஆகவே, அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏற்படக்கூடிய இத்தகைய மனவேதனைகளையும் துன்பங்களையும் சகித்துக் கொண்டு பொறுமையாக இருங்கள்; மேலும், அதற்கான நற்கூலியை உங்களுடைய இறைவனிடம் மட்டுமே எதிர்பாருங்கள்.

இரண்டாவது: உங்களுக்கான உபதேசம் என்னவென்றால்: அவர்களுடன் விவாதிப்பதையும் வாக்குவாதம் செய்வதையும் நீங்கள் முற்றிலுமாகத் தவிர்த்துவிடுங்கள். ஆனால், அவர்களுள் செவிமடுத்துப் பயனடையக்கூடிய அறிவுடைய ஒருவரை நீங்கள் கண்டால் மட்டுமே, அப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் மீலாது விழாவின் உண்மையான பின்னணி, அதன் மார்க்கச் சட்டம் மற்றும் அது ஏன் தவறானது என்பதற்கான ஆதாரங்களைத் தெளிவுபடுத்தலாம். மேலும், நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதன் சிறப்பையும், மார்க்கத்தில் புதுமைகளைப் புகுத்துவதன் தீமையையும் அவர்களுக்கு விளக்கலாம். அவ்வாறு புரிந்து கொள்ளக்கூடியவர்களை நீங்கள் கண்டால், அவர்களுடன் உரையாடுவதற்கும் அவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கும் பயன்படக்கூடிய சில முக்கிய விபரங்கள் இதோ:

  1. உங்களுடைய இஸ்லாம் ஒரு புதிய இஸ்லாம்” என்று அவர்கள் உங்களுக்கு சொன்ன அதே வாதத்தை வைத்தே அவர்களிடம் நாங்கள் ஆரம்பிப்போம்; அவர்களிடம் நாங்கள் சொல்ல வேண்டும் யாருடைய இஸ்லாம் மிக தொன்மையானது? இந்த மீலாது விழாவை கொண்டாடியவர்களா அல்லது கொண்டாடாதவர்களா? சந்தேகத்திற்கிடமின்றி, நேர்மையான சிந்தனையுடைய எந்தவொரு புத்திசாலியும் கூறக்கூடிய பதில்: “மீலாதுவிழா கொண்டாடாதவர்களின் இஸ்லாமே மார்க்கத்தில் மிகவும் பழமையானதாகும்” என்பதாகவே இருக்கும். ஏனெனில், எகிப்தில் உபைதிய்யா ஆட்சிக்காலம் தோன்றும் வரை, நபியவர்களின் தோழர்களோ, தாபிஊன்களோ, தபஉத் தாபியீன்களோ மற்றும் அவர்களுக்குப் பின்வந்த தலைமுறையினர் என எவருமே இந்த மீலாது விழாவைக் கொண்டாடவில்லை; இக்கொண்டாட்டம் அவர்களுக்குப் பின்னரே உருவாக்கப்பட்டது. அப்படியானால், உண்மையில் ' யார் புதிய இஸ்லாத்தைப்' பின்பற்றுபவர்?.
  2. நபியவர்களை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மிக அதிகமாக நேசிப்பது யார் என்பதை நாம் பார்ப்போம்: நபியவர்களின் தோழர்களான ஸஹாபாக்களா? அல்லது அவர்களுக்குப் பின்வந்த பிற்காலத் தலைமுறையினரா? சந்தேகத்திற்கிடமின்றி நேர்மையான சிந்தனையுடைய எந்தவொரு புத்திசாலியும் கூறக்கூடிய பதில்: ஸஹாபாக்களே நபியவர்கள் மீது மிக அதீத அன்பும், உன்னதமான பாசமும் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதாகத்தான் இருக்கும். அப்படியிருக்க, அவர்கள் நபியவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடினார்களா அல்லது அதனைத் தவிர்த்துக் கொண்டார்களா? நிலைமை இவ்வாறு இருக்க, பிற்காலத்தில் வந்தவர்கள் இந்த மீலாது விழாவைக் கொண்டாடுவதன் மூலம், நபியவர்கள் மீது தாங்கள் வைத்துள்ள அன்பில் உன்னத ஸஹாபாக்களோடு எவ்வாறு போட்டியிட முடியும்?!
  3. நாம் அவர்களிடம் கேட்கவேண்டும்: நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீது அன்பு வைப்பது என்பதன் பொருள் என்ன? நேர்மையான சிந்தனையுடைய எந்தவொரு புத்திசாலியும் கூறக்கூடிய பதில்: 'அவர்களுடைய நல்வழியைப் பின்பற்றுவதும், அவர்கள் காட்டித் தந்த பாதையில் (சுன்னாவில்) நடப்பதுமே ஆகும்' என்பதாகும். ஒருவேளை இந்த மீலாது விழாவைக் கொண்டாடுபவர்கள் தங்களது நபியின் வழிகாட்டுதலை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவர்களைப் பின்பற்றும் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தால்—நபியவர்களை உண்மையாக நேசித்து, அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி வாழ்ந்த உன்னத ஸஹாபாக்களுக்கு எது போதுமானதாக இருந்ததோ, அது இவர்களுக்கும் போதுமானதாக இருந்திருக்கும்! மேலும், 'நன்மைகள் அனைத்தும் முந்தைய சான்றோர்களைப் (ஸலஃபுகளைப்) பின்பற்றுவதிலேயே உள்ளது; தீமைகள் அனைத்தும் பிற்காலத்தவர்கள் உருவாக்கிய மார்க்கப் புதுமைகளிலேயே (பித்அத்களிலேயே) மலிந்துள்ளது' என்பதையும் அவர்கள் தெளிவாக புரிந்திருப்பார்கள்.

இமாம் காழி இயாள் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தனது நூலில் 'நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதுள்ள அன்பின் அடையாளங்கள்' என்ற அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! ஒருவர் ஒரு விடயத்தை நேசித்து விட்டால் அவ்விடயத்திற்கே முன்னுரிமை கொடுப்பார் அதற்கு தோதுவாக நடப்பதையே முற்படுத்துவார், அவ்வாறில்லையெனில் அவருடைய அன்பில் அவர் உண்மையானவராக இருக்க முடியாது, மாறாக அவர் நேசிக்கிறார் என்று அந்த வாதம் பொய்யானதாகிவிடும். எனவே தான் நபியவர்களை உண்மையாக நேசிப்பவர், அவருடைய செயல்களில் அந்த விடயம் வெளிப்பட வேண்டும்; அதில் முதலாவது: நபியவர்களை தனது முன்மாதிரியாக எடுத்து நடத்தல், அவருடைய வழிமுறைகளை நடைமுறைப்படுத்தல், அவருடைய சொற்கள் செயல்கள் அனைத்தையும் பின்பற்றுதல் மற்றும் கஷ்டமான மற்றும் எளிதான சூழ்நிலைகளிலும், மகிழ்ச்சியான மற்றும் வெறுப்பான நேரங்களிலும் அவருடைய ஏவல்களை எடுத்து நடத்தல், அவர்கள் தடுத்தவற்றை விட்டும் முற்றுமுழுதாக தவிர்ந்திருத்தல், அவர்கள் காட்டித் தந்த ஒழுக்க விழுமியங்களின்படி நடத்தல். இதனைத்தான் அல்லாஹுதஆலா திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்: {நபியே! நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் வெள்ளை பின்பற்றுங்கள்” அப்பொழுதுதான் அல்லாஹ் உங்களை நேசிப்பான்}(ஆலஇம்ரான்:31), தன்னுடைய ஆசை மற்றும் மனோ இச்சை போன்றவற்றைவிட நபியவர்களை மார்க்கமாக்கியதை மற்றும் அவர்கள் ஆசையூட்டிய விடயங்களை முற்படுத்துதல், அல்லாஹுதஆலா கூறுகிறான் {அவர்கள் (மதினாவை) தமது வாழ்விடமாகவும் இறை நம்பிக்கையையும் அவர்களுக்கு முன்னரே தேர்ந்தெடுத்தவர்கள், அவர்களிடம் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களை நேசித்தவர்கள், (அவ்வாறு வந்தவர்களுக்கு) பிரித்துக் கொடுக்கப்பட்டபொழுது அவர்களின் உள்ளத்தில் எந்தவொரு பொறாமையும் உண்டாகாதவர்கள், அவர்களுக்குத் தேவை இருந்தும் பிறரை முற்படுத்தியவர்கள்}(அல்ஹஷ்ர்:09).அல்லாஹுவின் திருப்பொருத்தத்திற்காக அடியார்களை வெறுப்பேற்றுதல்......

இத்தகைய பண்புகளை கொண்டுள்ளாரோ அவர் உண்மையாக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கக் கூடியவராக இருக்கிறார். அவற்றில் ஏதாவது சில பண்புகள் இல்லாமல் போகும்போது அவருடைய அந்த நேசத்தில் குறை ஏற்படுகிறது, ஆனால் முழுமையாக அல்லாஹ்வை நேசிக்கிறார் என்று அந்த பண்பிலிருந்து வெளியாகிவிடமாட்டார்.

அஷ்ஷிஃபா பிதஃரீபி ஹகூகில் முஸ்தபா:( 2:24,25)

  1. நாம் நமது நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) பிறந்த தேதியைக் குறித்து ஆராய்வோம், அது தொடர்பாக உறுதியான சான்றுகள் ஏதேனும் உண்டா? அதனைத் தொடர்ந்து, மறுபுறம் நபியவர்களின் மரணத் தேதி ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். நேர்மையான சிந்தனையுடைய எந்தவொரு புத்திசாலியும் கூறக்கூடிய பதில் என்னவென்றால்: நபியவர்களின் பிறந்த தேதி வரலாற்று ரீதியாகத் துல்லியமாக நிரூபிக்கப்படவில்லை என்பதும், மாறாக அவர்களின் மரணத் தேதி எவ்வித சந்தேகமுமின்றி முற்றிலும் உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதும் ஆகும்.

நபியவர்களின் வாழ்க்கை வரலாற்று (ஸீரா) நூல்களை நாம் எடுத்துப் பார்த்தால், வரலாற்று ஆசிரியர்கள் அவர்களின் பிறந்த தேதியைக் குறிப்பிடுவதில் பின்வருமாறு பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர் என்பதை நாம் தெளிவாகக் காணலாம்:

1.ரபீஉல் அவ்வல் (02), திங்கட்கிழமை.

2.ரபீஉல் அவ்வல் (08).

3.ரபீஉல் அவ்வல் (10).

4.ரபீஉல் அவ்வல் (12).

5.ரமழான் மாதம் – சுபைர் இப்னு பக்கார் என்பவரின் கருத்து.

ஒருவேளை நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு மார்க்கத்தில் ஏதேனும் ஒரு காரியம் (கொண்டாட்டம் போன்ற வழிபாடுகள்) செய்யப்பட வேண்டியிருந்திருந்தால், அது குறித்து ஸஹாபாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) நபியவர்களிடம் கண்டிப்பாகக் கேட்டிருப்பார்கள்; அல்லது நபியவர்களே அதனைப் பற்றி அவர்களுக்கு முன்கூட்டியே அறிவித்திருப்பார்கள். ஆனால், இவை இரண்டுமே நிகழவில்லை.

ஆனால், நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மரணத்தைப் பொறுத்தவரை: அது ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதம் 12 ஆம் நாள் நிகழ்ந்தது என்பதில் வரலாற்று ஆசிரியர்களுக்கு இடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை.

இப்பொழுது நாங்கள் மார்க்கத்தில் புதுமைகளை உண்டாக்கக்கூடிய இவர்கள் எப்பொழுது நபியவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்; அவர்கள் பிறந்த நாளில் அல்ல அவர்கள் இறந்த நாளிலேயே அதனை கொண்டாடுகிறார்கள். இந்த பித்அத்தை - தமது வம்சாவளியை பாதிமா (ரழி) அவர்களுடன் இணைத்து தங்களை பாதிமிய்யூன்கள் பெயர் சூட்டிக்கொண்ட - பாதினிய பிரிவைச் சேர்ந்த உபைதிய்யூன்கள் மக்களிடம் பரப்பிவிட்டார்கள், மக்களும் அதனை அவர்களின் அறியாமையின் காரணமாக அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்.

ஏனெனில், அந்த (உபைதிய்யா) கூட்டத்தினர் மார்க்கத்தை விட்டு வெளியேறிய நாத்திகர்களாகவும், இறைமறுப்பாளர்களாகவுமே இருந்தனர். அவர்கள் நமது நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மரண நேரத்தில் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடவே வே இப்படியொரு நிகழ்வைக் கண்டுபிடித்து, அதற்கெனக் கொண்டாட்டங்களையும் ஏற்பாடு செய்தனர். இந்த விழாக்கொண்டாட்டங்களில் தங்களோடு உடன்படுபவர்கள் அனைவரும் நபியவர்கள் மீதுள்ள அன்பைத்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று பாமர முஸ்லிம்களை மிகவும் தந்திரமாக நம்பவைத்து ஏமாற்றினர்.

இவ்வாறுதான் அவர்கள் தங்களது வஞ்சகத்திலும் சூழ்ச்சியிலும் வெற்றி பெற்றனர். மேலும், அவர்கள் இந்தப் பாமர மக்கள் மத்தியில் ' நம்பியவர்களின் மீதான நேசம்' என்பதன் உண்மையான அர்த்தத்தையே மாற்றுவதிலும் வெற்றி கண்டனர். நபியவர்கள் மீது அன்பு வைப்பது என்றால், மவ்லிதுக் கவிதைகளைப் பாடுவதும், தானியங்கள் மற்றும் இனிப்புகளை விநியோகிப்பதும் தான் என்று அவர்கள் மாற்றியமைத்தனர்!

அது மட்டுமன்றி நடன நிகழ்ச்சிகளை நடத்தல் ஆண் பெண் கலப்பு அதனுடன் சேர்ந்து வரும் இசை நிகழ்ச்சிகள், பெண்களின் உடல், உடை கவர்ச்சிகள் மற்றும் இன்னோரன்ன பல பாவச்செயல்களும் அங்கே அரங்கேறுகின்றன. அதற்கு மேலாக அங்கே கூடியிருக்கும் மக்களால் பல இணைவைத்தலான வார்த்தைகள் மற்றும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட புதிதாக உருவாக்கப்பட்ட உதவி தேடல்கள் என பல அநாச்சாரங்கள் அங்கு நடக்கும்.

மேலும், இந்த மார்க்கப் புதுமையின் (பித்அத்தின்) தவறு குறித்த விரிவான விபரங்கள், ஏற்கனவே எமது இணையதளத்தில் கேள்வி எண்கள்: (10070), (13810) மற்றும் (148053) ஆகியவற்றுக்கான பதில்களில் விளக்கப்பட்டுள்ளன; எனவே, அவற்றை நீங்கள் பார்வையிடலாம்.

மூன்றாவாதாக: கேள்வி கேட்ட என் அன்புச் சகோதரரே! உங்களது நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி நடப்பதில் நீங்கள் தொடர்ந்து உறுதியாகவும் பொறுமையாகவும் இருங்கள். பெரும்பான்மையானோர் நபிவழிக்கு மாறுபட்டு நடக்கிறார்கள் என்பது உங்களை ஒருபோதும் ஏமாற்றிவிடக் கூடாது. அத்துடன், மார்க்கக் கல்வியைத் தேடுமாறும், மக்களுக்குப் பயனளிப்பதில் ஆர்வம் காட்டுமாறும் உங்களுக்கு நாம் அறிவுரை சொல்கிறோம். உங்களது குடும்பத்தினர் செய்யக்கூடிய இத்தகைய காரியங்கள், உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்குக் காரணமாக நீங்கள் ஆக்கிவிட வேண்டாம். ஏனெனில், அவர்கள் இந்த விழாக்கள் அனுமதிக்கப்பட்ட ஒன்று, மட்டுமல்ல விரும்பத்தக்க ஒரு நற்செயல் என்று அவர்களுக்கு மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்குபவர்களையே குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிறார்கள். ஆகவே, அவர்கள் செய்யும் இத்தவறுகளை நீங்கள் தடுக்கும்போது மென்மையைக் கையாளுங்கள். மேலும், உங்களது மிகச் சிறந்த பேச்சுகள், நற்செயல்கள் மற்றும் நற்பண்புகளை அவர்களிடம் வெளிப்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டுங்கள். நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய அன்றாட நன்னடத்தையிலும், வழிபாடுகளிலும் ஏற்பட்டுள்ள அந்த அழகிய மாற்றத்தை அவர்களுக்குக் காட்டிக் கொடுங்கள். உங்களது முயற்சிகளுக்கு அல்லாஹ் வெற்றியை வழங்க நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலநூட்கள்

பித்ஆ
முஸ்லிம்களுக்கான அழைப்புப் பணி

மூலம்

இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம்

answer

சம்பந்தப்பட்ட தலைப்புகள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android