மரணித்தவர்களிடம் தவஸ்ஸுல் செய்பவர்கள் ஆதாரமாகக் காட்டும் பார்வையற்றவரின் ஹதீஸ்.

கேள்வி 97600

நான் "ஸஹீஹுல் ஜாமிஉஸ் ஸகீர்" எனும் நூலை வாசிக்கும்போது பின்வரும் நபிமொழியை (ஹதீஸ் எண்:1279) வாசிக்கக் கிடைத்தது.
(அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் வேண்டுகிறேன்; கருணை மிக்க உன்னுடைய தூதரான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி. வஸல்லம்). அவர்களின் மூலம் உன்னை முன்னோக்கி கேட்கிறேன். யா முஹம்மத்! எனது இந்தத் தேவை நிறைவேற்றப்படுவதற்காக நான் உங்கள் மூலம் எனது இறைவனை முன்னோக்கியுள்ளேன்; யா அல்லாஹ்! எனது விடயத்தில் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக)

இந்த ஹதீஸைப் புரிந்துகொள்வதில் எனக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது, அதாவது: கப்ரடிகளை வணங்குவோர் மற்றும் அவர்களைப் போன்ற, மரணித்தவர்களிடம் தவஸ்ஸுல் தேடுபவர்களுக்கு இதில் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? மேலும், இந்த விளக்கம் என்ன?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

[கண்பார்வையற்ற ஒரு மனிதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, "எனக்குக் நிவாரணமளிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று வேண்டினார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்: “நீ விரும்பினால் நான் உனக்காகப் பிரார்த்திக்கிறேன்; அல்லது நீ விரும்பினால் இதனை (மறுமைக்காக) பிற்படுத்தி விடுகிறேன், அதுவே உனக்குச் சிறந்தது” என்றார்கள். (மற்றொரு அறிவிப்பில்: "நீ விரும்பினால் பொறுமையாக இரு, அதுவே உனக்குச் சிறந்தது" என்று வந்துள்ளது). அதற்கு அந்த மனிதர், "(இல்லை, இப்பொழுதே) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். எனவே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அவரை அழகிய முறையில் வுழூச் செய்து, இரண்டு ரக்அத்கள் தொழுது, பின்வரும் துஆவை ஓதுமாறு ஏவினார்கள்: (அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் வேண்டுகிறேன்; கருணை மிக்க உன்னுடைய தூதரான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி. வஸல்லம்). அவர்களின் மூலம் உன்னை முன்னோக்கி கேட்கிறேன். யா முஹம்மத்! எனது இந்தத் தேவை நிறைவேற்றப்படுவதற்காக நான் உங்கள் மூலம் எனது இறைவனை முன்னோக்கியுள்ளேன்; யா அல்லாஹ்! எனது விடயத்தில் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக)!

அறிவிப்பாளர் கூறுகிறார்: "அந்த மனிதர் அவ்வாறே செய்தார், உடனே அவர் குணமடைந்தார்."]

இந்த ஹதீஸை புரிந்துகொள்வதில் சிலருக்கு குழப்பம் உள்ளது. அவர்கள் இதில் சில வகையான பித்அத்தான (மார்க்கத்தில் அனுமதியற்ற) தவஸ்ஸுல்களுக்கு ஆதாரம் இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள், ஆனால் உண்மை அவ்வாறு இல்லை.

இந்த ஹதீஸிலிருந்து புரியப்படும் இவ்வாறான பிரச்சனைக்கு பல அறிஞர்கள் பதிலளித்துள்ளார்கள். மேலும், ஒருவரை கொண்டோ அல்லது  அவரது அந்தஸ்தைக் கொண்டோ செய்யப்படும் பித்அத்தான தவஸ்ஸுலை ஆதரிப்பவர்களுக்கோ, இன்னும் குறிப்பாக, மரணித்தவர்களிடம் தவஸ்ஸுல் செய்வதற்கும் அல்லாஹ்வையன்றி அவர்களிடம் பிரார்த்திப்பதற்கும் இதில் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதற்கு அறிஞர் அல்லாமா ஷேக் முஹம்மத் நாஸிருத்தீன் அல்-அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமது "அத்தவஸ்ஸுல்: அன்வாஉஹு  வஅஹ்காமுஹு" (தவஸ்ஸுல்: அதன் வகைகளும் சட்டங்களும்) என்ற நூலில் அறித்துள்ள மறுப்பானது, இவ்விடயத்தில் ஆழமான, மற்றும் வலுவான ஒரு அறிவு பூர்வமான  மார்க்க விளக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.

அவர்கள் அளித்த விளக்கங்களில் சிலது பின்வருமாறு:

"ஆனால் நாங்களோ, இந்த ஹதீஸில் முறித்த ஒரு மனிதரை முன்வைத்து தவஸ்ஸுல் செய்தல் என்ற கொள்கைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றே கருதுகிறோம். மாறாக, இது அனுமதிக்கப்பட்ட மார்க்க வரம்பிற்குட்பட்ட தவஸ்ஸுல் வகைகளில் மூன்றாவது வகையான - ஒரு நல்ல மனிதரின் பிரார்த்தனையை முன்வைத்து தவஸ்ஸுல் செய்தல் -என்பதற்கான மற்றொரு தெளிவான சான்றாகும். ஏனெனில், அந்தப் பார்வையற்றவரின் தவஸ்ஸுல் என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துஆவைக் கொண்டு மட்டுமே அமைந்திருந்தது. நாம் கூறும் இந்தக் கருத்திற்கு அந்த ஹதீஸிலிருந்தே பல சான்றுகள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானவை: முதலாவதாக: அந்தப் பார்வையற்றவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்ததே தமக்காகப் பிரார்த்தனை செய்யக் கோருவதற்காகத்தான். இது, 'எனக்குக் குணமளிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்ற அவருடைய வாசகத்திலிருந்து தெளிவாகிறது. எனவே, இது அல்லாஹ்வின் தூதருடைய பிரார்த்தனையின் மூலமாக அல்லாஹ்விடம் முன்வைக்கப்பட்ட தவஸ்ஸுல் ஆகும். ஏனெனில், மற்றவர்களின் பிரார்த்தனையை விட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிரார்த்தனை அல்லாஹ்விடம் மிக விரைவாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது என்பதை அவர் அறிந்திருந்தார்.

ஒருவேளை, அந்தப் பார்வையற்றவரின் நோக்கம் நபியவர்களின் உடலையோ , அவர்களின் அந்தஸ்தையோ  அல்லது அவர்களின் உரிமையையோ முன்வைத்து தவஸ்ஸுல் செய்வதாக இருந்திருந்தால், அவர் நபியவர்களிடம் நேரில் வர வேண்டிய அவசியமோ, தமக்காகப் பிரார்த்திக்குமாறு அவரிடம் கோர வேண்டிய தேவையோ இருந்திருக்காது. மாறாக, அவர் தன் வீட்டிலேயே அமர்ந்து கொண்டு, உதாரணமாக: “அல்லாஹ்வே! உன்னுடைய நபியின் அந்தஸ்தைக் கொண்டும், உன்னிடம் அவர்களுக்கு இருக்கும் கண்ணியத்தைக் கொண்டும் எனக்குக் குணமளித்து, என்னை பார்வையுடையவனாக ஆக்குமாறு உன்னிடம் வேண்டுகிறேன்” என்று தனது இறைவனிடம் பிரார்த்தித்திருக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை."

இரண்டாவதாக: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவருக்குப் பிரார்த்தனை செய்வதாக வாக்குறுதி அளித்ததோடு, அவருக்கு எது மிகச் சிறந்தது என்பதை விவரித்து ஒரு நற்போதனையும் வழங்கினார்கள். அதுதான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இந்த வாசகமாகும்: "நீ விரும்பினால் நான் பிரார்த்திக்கிறேன்; அல்லது நீ விரும்பினால் பொறுமையோடு சகித்துக் கொள், அதுவே உனக்குச் சிறந்தது."

மூன்றாவதாக: அந்தப் பார்வையற்றவர் பிரார்த்தனை செய்யுமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதாகும்; அதுதான் அவருடைய "எனவே, பிரார்த்தியுங்கள்" என்ற வாசகமாகும். இது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள் என்பதை அவசியமாக்குகிறது (உறுதிப்படுத்துகிறது). ஏனெனில், தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நபியவர்கள் தான் மிகச் சிறந்தவர்களாவர். மேலும், அவர் விரும்பினால் அவருக்காகப் பிரார்த்திப்பதாக ஏற்கனவே அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார்கள். எனவே, அவர்கள் கண்டிப்பாக அவருக்காகப் பிரார்த்தனை செய்திருப்பார்கள் என்பது திண்ணம்; இதன் மூலம் நாம் நாடிய கருத்து (அதாவது இது பிரார்த்தனையின் மூலமான தவஸ்ஸுல் என்பது) உறுதியாகிவிட்டது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தங்களின் கருணையின் காரணமாகவும், அந்த மனிதரின் விஷயத்தில் அல்லாஹ் தங்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேரார்வத்தின் காரணமாகவும், அவரை அனுமதிக்கப்பட்ட தவஸ்ஸுல் வகைகளில் இரண்டாவது வகையான - நற்செயல்களை முன்வைத்து தவஸ்ஸுல் செய்தல் - என்பதன் பக்கம் வழிகாட்டினார்கள். இதன் மூலம் அவருக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் நன்மைகள் ஒன்று சேர வேண்டும் என்று நாடினார்கள். எனவேதான், அவரை வுழூச் செய்து, இரண்டு ரக்அத்கள் தொழுது, பின்னர் தமக்காகப் பிரார்த்திக்குமாறு ஏவினார்கள். இந்த நற்செயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளாகும். இதனை அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிரார்த்தனைக்கு முன்னதாக செய்கிறார். இது முன்னர் விவரிக்கப்பட்ட இறைவசனமான, {அல்லாஹ்வை நெருங்குவதற்குரிய) வஸீலாவைத் (நற்செயல்களைத்) தேடிக் கொள்ளுங்கள்} (அல்-மாயிதா: 35) என்ற அல்லாஹ்வின் ஏவலில் உள்ளடங்குகிறது.

இதன் அடிப்படையில், வெளிப்படையாகத் தெரிவது போல் இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் துஆவை சுற்றியே நகர்கிறது. அவர்கள் வாதாடுவது போன்ற எந்தவொரு விஷயமும் இதில் குறிப்பிடப்படவில்லை.

நான்காவதாக: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவருக்குக் கற்றுக்கொடுத்த துஆவில், "அல்லாஹ்வே! எனக்காக அவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக" என்று கூறச் சொல்லியுள்ளார்கள். இந்த வாசகத்தை நபியவர்களின் உடலையோ, அவர்களின் அந்தஸ்தையோ அல்லது அவர்களின் உரிமையையோ முன்வைத்துச் செய்யும் தவஸ்ஸுலாகக் கருதுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

ஏனெனில், இதன் பொருள்: "அல்லாஹ்வே! என் விஷயத்தில் நபியவர்கள் செய்த பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக" என்பதாகும். அதாவது: "எனக்கு மீண்டும் கண் பார்வையை வழங்குமாறு அவர்கள் உன்னிடம் செய்த பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக" என்று தான் அர்த்தம்.

அரபு மொழியியல் அடிப்படையில் 'ஷஃபாஅத்' (الشفاعة) என்பது பிரார்த்தனையைக் குறிக்கும். "லிஸானுல் அரப்" என்ற புகழ்பெற்ற அரபு அகராதி நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: "பரிந்துரை (ஷஃபாஅத்) என்பது, ஒரு பரிந்துரையாளர் மற்றொரு நபரின் தேவைக்காக அரசனிடம் பேசுவதாகும். பரிந்துரை செய்பவர் மற்றவருக்காக வேண்டியதைத் தேடித் தருபவர் ஆவார்; அவர் மூலமாகவே குறிப்பிட்ட அரசிடம் பரிந்துரை கோரப்படும். 'நான் இன்னார் மூலமாக இன்னாரிடம் பரிந்துரை கோரினேன், அவரும் என் விஷயத்தில் அவரது பரிந்துரையை ஏற்றுக் கொண்டார்' என்று கூறப்படும்." (லிஸானுல் அரப்" (8/184)

எனவே, இந்த கோணத்திலும் அந்தப் பார்வையற்றவரின் தவஸ்ஸுல் என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிரார்த்தனையைக் கொண்டுதான் அமைந்திருந்ததே தவிர, அவர்களின் உடலைக் கொண்டு அல்ல என்பது திட்டவட்டமாக உறுதியாகிறது.

ஐந்தாவதாக: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்தப் பார்வையற்றவருக்குக் கற்றுக்கொடுத்த துஆவில் பின்வரும் வாசகமும் இடம் பெற்றுள்ளது:" அவரின் விஷயத்தில் எனது பரிந்துரையையும் ஏற்றுக்கொள்வாயாக! அதாவது: "யா அல்லாஹ்! என் விஷயத்தில் நபியவர்கள் செய்த பரிந்துரையை (பிரார்த்தனையை) நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் உன்னிடம் செய்யும் பரிந்துரையை - அதாவது எனது துஆவை - ஏற்றுக் கொள்வாயாக!" என்பதாகும். அதாவது, "எனக்கு மீண்டும் கண் பார்வையை வழங்குமாறு அவர்கள் உன்னிடம் செய்த பிரார்த்தனையை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என நான் வேண்டும் துஆவை ஏற்றுக் கொள்வாயாக" என்று அர்த்தம். இந்த வாசகத்திலிருந்து இந்த அர்த்தத்தைத் தவிர வேறு எதனையும் விளங்கிக் கொள்ள முடியாது.

இதன் காரணமாகவே, நமக்கு முரண்படக்கூடியவர்கள் இந்த வாசகத்தைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள்; மேலும், இதன் பக்கமே அவர்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ நெருங்குவதும் இல்லை. ஏனெனில், இந்த ஒரு வாசகம் அவர்கள் எழுப்பியுள்ள தவறான கொள்கையின் அஸ்திவாரத்தையே தகர்த்து, அதனை வேரோடு பிடுங்கி எறிந்துவிடுகிறது.

ஆறாவதாக: பல மார்க்க அறிஞர்கள் இந்த ஹதீஸை, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அற்புதங்கள் மற்றும் அவர்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரார்த்தனைகள்  எனும் தலைப்புகளின் கீழேயே குறிப்பிட்டுள்ளனர். மேலும், நபியவர்களின் பிரார்த்தனையின் பரக்கத்தினால் அல்லாஹ் வெளிப்படுத்திய வழக்கத்திற்கு மாறான அற்புத நிகழ்வுகள் மற்றும் நோய்களிலிருந்தான நிவாரணம் ஆகியவற்றின் கீழும் இதனைப் பதிவு செய்துள்ளனர். ஏனெனில், அந்தப் பார்வையற்ற மனிதருக்காக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்த பிரார்த்தனையின் மூலமாகவே அல்லாஹ் அவருக்குக் கண் பார்வையை மீண்டும் வழங்கினான். இதனால்தான், இமாம் பைஹகீ போன்ற ‘நபத்துவத்தின் சான்றுகள்’ என்ற தலைப்பில் நூல் எழுதிய ஆசிரியர்கள் இந்த ஹதீஸை அந்த நூல்களில் பதிவுசெய்துள்ளனர். எனவே, அந்தப் பார்வையற்ற மனிதர் குணமடைந்ததன் பின்னணியில் இருந்த உண்மையான ரகசியம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிரார்த்தனையே தவிர வேறில்லை என்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது.

"எனவே, தற்காலத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் விளங்கி வைத்திருப்பது போல, அந்தப் பார்வையற்ற மனிதர் குணமடைந்ததன் பின்னணியில் இருந்த இரகசியம் - அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அந்தஸ்தையோ, அவர்களின் மதிப்பையோ அல்லது அவர்களின் உரிமையையோ முன்வைத்து தவஸ்ஸுல் செய்ததுதான் என்றிருந்தால், நபியவர்களின் அந்தஸ்தைக் கொண்டு தவஸ்ஸுல் செய்யும் ஏனைய பார்வையற்றவர்களுக்கும் இந்த நிவாரணம் கிடைத்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாது அவர்கள் சில நேரங்களில் நபியவர்களின் அந்தஸ்தோடு சேர்த்து, அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஏனைய தூதர்கள், நபிமார்கள், அவலியாக்கள், தியாகிகள், நல்லவர்கள், மற்றும் அல்லாஹ்விடம் அந்தஸ்து பெற்றிருக்கக்கூடிய அனைத்து வானவர்கள், மனிதர்கள், ஜின்னினங்கள்  என அனைவரின் அந்தஸ்தையும் கூட இணைத்துத்தான் (அல்லாஹ்விடம்) வேண்டுகிறார்கள்!

இருப்பினும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணித்ததிலிருந்து இன்று வரைக்கும் பல நூற்றாண்டுகளிலும், அது போன்றதொரு நிவாரணம் யாருக்காவது கிடைத்திருப்பதாக நாம் அறியவும் இல்லை; எவரேனும் அறிந்திருப்பார் என்று நாம் எண்ணவும் இல்லை."

இந்த விரிவான விளக்கத்தின் மூலம், அந்தப் பார்வையற்றவர் தனது பிரார்த்தனையில், 'அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் வேண்டுகிறேன்; உன்னுடைய நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மூலம் உன்னிடம் தவஸ்ஸுல் செய்கிறேன்' என்று கூறிய வாசகத்தின் உண்மையான நோக்கம் என்னவென்பது தெளிவாகப் புலனாகிறது. அதாவது, 'உன்னுடைய நபியின் பிரார்த்தனையைக் கொண்டு உன்னிடம் தவஸ்ஸுல் செய்கிறேன்' என்பதே அதன் பொருளாகும். அரபு மொழியியல் விதிகளின்படி, இது ‘ஒரு கூட்டுச்சொல்லின் முதற்பகுதியை மறைத்துக்கூறுதல்’ என்ற விதியைச் சார்ந்ததாகும். இது அரபு இலக்கணத்தில் மிகவும் பிரபலமான, அறியப்பட்ட ஒரு வழிமுறையாகும். இதற்கு உதாரணமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடலாம்: "நாங்கள் சென்றிருந்த ஊரிடமும், நாங்கள் யாருடன் வந்தோமோ அந்த ஒட்டகக் கூட்டத்திடமும் நீர் கேட்டுப் பாரும்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களே!" (சூரா யூஸுஃப்: 82) இங்கு 'ஊரிடமும் ஒட்டகக் கூட்டத்திடமும் கேட்டுப் பாரும்' என்பதன் உண்மையான மொழியியல் அர்த்தம்: 'அந்த ஊரின் மக்களிடமும், அந்த ஒட்டகக் கூட்டத்தின் சொந்தக்காரர்களிடமும் கேட்டுப் பாரும்' என்பதாகும். (வசனத்தில் 'மக்கள்' மற்றும் 'சொந்தக்காரர்கள்' என்ற வார்த்தைகள் மறைந்து வந்துள்ளன). அதேபோலவே, இந்த ஹதீஸிலும் 'நபியின் மூலம்' என்பதற்குப் பின்னால் 'நபியின் பிரார்த்தனையின் மூலம்' என்ற கருத்து மறைந்திருக்கிறது."

"இருப்பினும், நான் கூறுவது யாதெனில்: ஒருவேளை அந்தப் பார்வையற்றவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உடலைக் கொண்டுதான் தவஸ்ஸுல் செய்தார் என்பது உண்மையாகவே இருந்தாலும்கூட, அது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மட்டுமே உரிய ஒரு பிரத்தியேக சட்டமாக தான் இருக்கும். இதில் ஏனைய நபிமார்களோ அல்லது நல்லடியார்களோஅவர்களோடு பங்கெடுக்க முடியாது. மேலும், மற்றவர்களை அவர்களோடு இணைப்பதைச் சரியான மார்க்க மற்றும் பகுத்தறிவுப் பார்வை ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அனைவரின் தலைவரும்,  அவர்களை விட மிகச் சிறந்தவருமாவார். எனவே, ஆதாரப்பூர்வமான செய்திகளில் வந்துள்ள பல பிரத்தியேகச் சிறப்புகளைப் போல, இதுவும் அல்லாஹ் அவர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கிய ஒன்றாக இருக்கலாம். பிரத்தியேகச் சிறப்புகள்  என்ற வரம்பிற்குள் ஒப்பீடுமுறை (கியாஸ்)நுழைய முடியாது.

எனவே, அந்தப் பார்வையற்றவரின் தவஸ்ஸுல் என்பது அல்லாஹ்வின் தூதருடைய உடலைக் கொண்டுதான் அமைந்தது என்று எவரேனும் கருதினால், அவர் அதோடு மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டும்; அதற்கு மேல் எதனையும் அதிகரிக்கக்கூடாது. இதுதான் இமாம் அஹ்மத் மற்றும் இஸ் பின் அப்திஸ்ஸலாம் (ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோரிடமிருந்தும் நிருவப்பட்டுள்ளது. நடுநிலையான அறிவியல் பூர்வமான ஆய்வும் இதனைத்தான் வேண்டிநிற்கிறது.. அல்லாஹ்வே நேர்வழிக்கு அளிப்பவன்." (இத்துடன் இமாம் அல்பானி அவர்களின் ‘தவஸ்ஸுல்’ எனும் நூலில் இருந்து தகவல்கள் சுருக்கமாக முடிவடைகின்றன: பக்கம் 75 முதல்..).

மூலநூட்கள்

இணைவைப்பும் அதன் வகைகளும்

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android