புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!
அர்ஷ் ஏழு வானங்களுக்கும் மேலால் இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்பது மாத்திரமின்றி அனைத்துப் படைப்புக்களுக்கும் மேல்தான் அர்ஷ் உள்ளது.
இதற்கு நேரடியான பல ஆதாரங்கள் உள்ளன.
அவற்றில் ஒன்று இமாம் புகாரி அவர்கள் அறிவிக்கும் (2581) செய்தி,
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அறிவிக்கிறார்கள்: " சுவர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹுத்தஆலா இறைவழியில் போராடிய முஜாஹிதுகளுக்காகத் தயார்படுத்தியுள்ளான். ஒவ்வொரு படித்தரத்துக்குமான வேறுபாடு வானத்துக்கும் பூமிக்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்கும் போது பிர்தவ்ஸ் எனும் சுவனத்தைக் கேளுங்கள். அதுதான், சுவனத்தின் மத்திய பகுதியும் மிகவும் உயர்ந்த பகுதியுமாகும். அதற்கு மேல்தான் அருளாளன் ரஹ்மானின் அர்ஷ் இருக்கின்றது. அதிலிருந்துதான் சுவனத்தின் நதிகள் ஊற்றெடுக்கின்றன".
சுவர்க்கம் ஏழாவது வானத்துக்கு மேல் இருக்கிறது என்பதே அனைத்து முஸ்லிம்களின் முடிவாகும். எனவே சுவனத்துக்கு மேல் அர்ஷ் இருப்பதனால், அது ஏழாவது வானத்துக்கு மேலால்தான் இருந்தாக வேண்டும்.
இந்தக் கருத்தை வலுப்படுத்தும் அடுத்த ஆதாரமாக, இமாம் முஸ்லிம் அவர்கள் தனது ஸஹீஹ் கிரந்தத்தில் (4136) அறிவிக்கும் செய்தி காணப்படுகின்றது. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அன்ஸாரித் தோழர்களில் ஒருவர் கூறினார், "....... எமது இரட்சகன் ஒரு விடயத்தைத் தீர்மானித்து விட்டால் அர்ஷை சுமப்பவர்கள் அல்லாஹ்வைத் (தஸ்பீஹ் எனும்) துதி செய்வார்கள். பின்பு அவர்களை அடுத்துள்ள வானிலுள்ளோர் துதி (தஸ்பீஹ்) செய்வர். இந்தக் முதல்வானிலுள்ளோரை தஸ்பீஹ் வந்தடையும் வரை அது தொடரும். பின்னர், அர்ஷை சுமப்பவர்களுக்கு அடுத்திருப்போர் அர்ஷை சுமப்பவர்களிடம்: "உங்களது இரட்சகன் என்ன சொன்னான்" எனக் கேட்பர். அல்லாஹ் சொன்னவற்றை அவர்கள் சொல்வார்கள். இவ்வாறு வானவர்கள் ஒரு குழுவிடமிருந்து இன்னொரு குழுவினர் கேட்டறிந்து கொள்வது இந்த முதல்வானிலுள்ளோர் செய்தியை அறிந்துகொள்ளும் வரை தொடராக நடைபெறும்" இந்த ஹதீஸ் மிகத் தெளிவாக, அர்ஷும் அதனைச் சுமக்கும் வானவர்களும் அனைத்து வானங்களுக்கும் மேலால் இருக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
இமாம் இப்னு குஸைமா அவர்களின் ஸஹீஹ் கிரந்தத்தில் 105வது இலக்கத்திலும், தவ்ஹீத் என்ற நூலின் 594வது இலக்கத்திலும் இடம்பெறும் பின்வரும் நபிமொழியும் இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "இந்தக் கீழ் வானத்துக்கும் அதற்கடுத்துள்ள வானத்துக்கும் இடையேயான தூரம் ஐநூறு வருடங்களாகும். ஒவ்வொரு வானத்துக்குமிடையிலான தூரமானது ஐநூறு வருடங்கள் நடைதூரமாகும்". இன்னொரு அறிவிப்பில், "ஒவ்வொரு வானத்தினதும் அடர்த்தியானது ஐநூறு வருட நடைப்பயண தூரமாகும். ஏழாவது வானத்துக்கும் குர்ஸீயிக்கும் இடையே ஐநூறு வருட நடை தூரமாகும். குர்ஸீயிக்கும் நீருக்குமான தூரம் ஐநூறு வருடங்களாகும். அர்ஷானது நீருக்கு மேலே உள்ளது. அல்லாஹ் அர்ஷுக்கு மேலே உள்ளான். உங்களின் செயல்களில் எந்த ஒன்றும் அவனுக்கு மறையாது". இந்த தகவலை இமாம் தஹபீ அவர்கள், அல்-உலுவ்வு எனும் நூலில் (பக்:64) ஸஹீஹ் எனக் குறிப்பிடுகின்றார்கள். இப்னுல்-கய்யிம் அவர்கள், 'இஜ்திமாஉல் ஜூயூஷில் இஸ்லாமிய்யா' எனும் நூலில் (பக்:100) ஸஹீஹ் எனக் குறிப்பிடுகின்றார்கள்.
தஹபி அவர்கள் குறிப்பிடும் அறிவிப்பு, அவரது உலுவ் என்ற நூலின் சுருக்கத்தில் 35வது இலக்கத்தில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் ஏழாவது வானத்திற்கு மேலே தண்ணீரை உருவாக்கினான். தண்ணீருக்கு மேலே அர்ஷை உருவாக்கினான்.”
இச்செய்தி (ஸஹீஹ்) ஆதாரபூர்மானது என அஷ்-ஷெய்க் அல்பானீ தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
அறிஞர் பெருமக்களும், அர்ஷ் ஆனது அனைத்து படைப்புக்களினதும் முகடாகவும் உச்சியாகவும் உள்ளது என்று கூறியுள்ளனர்.
இப்னுல்-கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், “ஸாதுல்-மஆத்” (4/203) இல்:
அர்ஷ் ஆனது, படைப்புக்களின் முகடும் அவற்றில் மிகவும் பிரமாண்டமானதுமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். - சிறிய மாற்றங்களுடன்.
இவ்வாறு ஷெய்குல்-இஸ்லாம் அவர்களும், “மஜ்மூஃ அல்-ஃபத்தாவா”வில் (6/581), (25/1998) குறிப்பிட்டுள்ளார்கள்.
இதனையே இப்னு கதீர் அவர்கள் “அல்-பிதாயா வன்-நிஹாயா” (1/9, 11) விலும் இப்னு அபில்-இஸ் அவர்கள் “ஷரஹ் அல்-அகீதா அத்-தஹாவிய்யா” (1/311) விலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பார்க்கவும்: (தஹபியின் 'முக்தஸர் அல்-உலுவ்', இப்னு குஸைமாவின் 'அத்-தவ்ஹீத்' மற்றும் இப்னுல்-கய்யிமின் 'இஜ்திமாஉல்-ஜூயூஷில் இஸ்லாமிய்யா'