மீலாது விழாவை அனுமதிப்பவர்களின் பார்வையில், அது ஒரு மார்க்க வழிபாடே (இபாதத்) தவிர சாதாரண வழக்கமல்ல.

கேள்வி 219307

மார்க்கத்தில் வழிபாட்டு நோக்கில் புதிதாக உருவாக்கப்படும் எல்லாமே மார்க்கப் புதுமை (பித்அத்) என்பதை நான் அறிவேன். நிலைமை இவ்வாறு இருக்க, மீலாது விழா என்பது வழிபாடுகளுடன் எவ்விதத் தொடர்புமற்ற வெறும் ஒரு கொண்டாட்டம் மாத்திரமே என்றிருக்கையில், நாம் ஏன் அதனை பித்அத் என்று வர்ணிக்க வேண்டும்? நிச்சயமாகச் சிலர், நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நமக்கு இரண்டு பெருநாட்களை மட்டுமே காட்டித் தந்துள்ளார்கள், அவை தவிர வேறு கொண்டாட்டங்கள் இல்லை என்று இதற்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். நான் மீண்டும் இங்கு தெளிவுபடுத்துவது என்னவென்றால், மீலாது விழா கொண்டாடுவது என்பது எவ்வித வழிபாட்டுச் சடங்குகளும் அற்ற ஒரு சாதாரண  கொண்டாட்டம் மட்டுமே ஆகும்; இது ஒருவரது பிறந்தநாளைக் கொண்டாடுவது போன்ற ஒரு சாதாரண விஷயம் தான்.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

மீலாது விழா கொண்டாடுவது என்பது அதிலே ஈடுபடுபவர்களின் பார்வையில் வழிபாடுகளுடன் எவ்விதத் தொடர்புமற்ற ஒரு சாதாரண கொண்டாட்டம் மாத்திரமல்ல;  மாறாக அவர்களிடத்தில் அது ஒரு 'மார்க்க ரீதியான பெருநாள் ஆகும். மேலும், அவர்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறும்  நோக்கிலேயே அதனைச் செய்கிறார்கள்.

இதனைப் பின்வருமாறு  மிகத் தெளிவாக விளக்கலாம்:

முதலாவது: இந்த விழாவை ஏற்பாடு செய்பவர்களும் அதில் பங்கேற்பவர்களும், நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காகவே இதனை செய்கிறார்கள். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பது என்பதே மிக முக்கியமான வழிபாடுகளில் ஒன்றாகவும், ஈமானின் மிக வலுவான கயிறாகவும் (அடிப் படையாகவும்) திகழ்கிறது. எனவே, அந்த அன்பை வெளிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் எந்தவொரு செயலும், நிச்சயமாக வழிபாட்டு அடிப்படையிலும் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறும் நோக்கிலுமே செய்யப்படுகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

"இதன் அடிப்படையில் நாம் கூறுவது என்னவென்றால்: நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸஹாபாக்கள், அவர்களுக்குப் பின்வந்த தலைமுறையினரை விடவும் நபியவர்கள் மீது மிக அதீத அன்பும் பாசமும் கொண்டவர்களாகவும், அவர்களை மிக அதிகமாகக் கண்ணியப்படுத்தக் கூடியவர்களாகவும், அவர்களின் உரிமைகளை மிகத் தெளிவாக அறிந்தவர்களாகவும் திகழ்ந்தார்கள். எனவே, அன்றைய அந்தச் சமூகத்திற்கு எது மார்க்கமாக இருக்கவில்லையோ, அது அவர்களுக்குப் பின்வருபவர்களுக்கும் ஒருபோதும் மார்க்கமாக இருக்க முடியாது.

இதே அடிப்படையை வைத்துத்தான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் பள்ளியில் வட்டமாக உட்கார்ந்து அனைவரும் சேர்ந்து கற்களை எண்ணி திக்ரு செய்து கொண்டிருந்தவர்களுக்கு எதிராக ஆதாரம் காட்டினார்கள்:

என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக நீங்கள் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மார்க்க நெறியை விடவும் மிகச் சிறந்த நேர்வழி பெற்ற ஒரு மார்க்கத்தில் இருக்கிறீர்கள்; அல்லது நீங்கள் ஒரு பெரும் வழிகேட்டின் கதவைத் திறப்பவர்களாக இருக்கிறீர்கள்!

அதற்கு அவர்கள், 'அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் நன்மையைத் தவிர வேறெதையும் நாடவில்லை!' என்றனர்.

அதற்கு அவர், 'நன்மைய நாடக்கூடிய எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் ஒருபோதும் அந்த நன்மையை அடைவதே இல்லை!' என்று கூறினார்" (நூல்: ஸுனனுத்தாரிமீ: 210).

இரண்டாவது: ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடர்ந்து நடத்தப்படும் இத்தகைய கொண்டாட்டங்கள், அதனை ஒரு பெருநாளாக மாற்றிவிடுகின்றன. பெருநாட்கள் என்பது மார்க்க வழிபாட்டுச் சின்னங்களுள் ஒன்றாகும். இதனால்தான், வேதக்காரர்கள் (யூதர்களும் கிறிஸ்தவர்களும்) தங்களது பெருநாட்களைப் புனிதமாகக் கருதி, அவற்றைக் கொண்டாடுவதை நீங்கள் காண முடியும்.

ஷேஃக் நாஸிர் அல்-அக்ல் (ஹஃபிழஹுல்லாஹ்) அவர்கள் தனது இக்திழாஉஸ்ஸிராதில் முஸ்தகீம் என்ற நூலின் முன்னுரையில்(பக்கம்:58) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

“பெருநாட்கள் என்பது வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் மாத்திரமல்ல மாறாக, கிப்லாவை முன்னோக்குதல், தொழுகை, நோன்பு போன்ற மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளுடன் சம்பந்தப்பட்டவை. எனவே இந்த விடயங்களில் இறை நிராகரிப்பாளர்களை பின்பற்றுவதும் அவர்களுக்கு ஒப்பாவதும் மிகவும் ஆபத்தானதும் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடையுமுமாகும். அதே நேரம் அல்லாஹுதஆலா காட்டித் தராத எந்த ஒரு பெருநாளையும் மார்க்கமாக ஆக்குவது அல்லாஹுதஆலாவால் இறக்கப்படாததை கொண்டு தீர்ப்பளிப்பதாகவும், எந்த அறிவுமின்றி அல்லாஹ்வின் மீது பொய் சொல்வதாகவும், அவனின்மீது இட்டுக்கட்டுவதாகவும் அமையும்”

மூன்றாவது: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதினாவிற்கு வந்த போது, அங்குள்ள மக்கள் விளையாடி மகிழ்வதற்கென இரண்டு நாட்கள் (பெருநாட்கள்) இருந்தன. அப்போது நபியவர்கள், "இந்த இரண்டு நாட்களின் பின்னணி என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நாங்கள் அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யா) இந்த இரண்டு நாட்களிலும் விளையாடி மகிழக்கூடியவர்களாக இருந்தோம்" என்றனர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு இவ்விரண்டு நாட்களுக்குப் பதிலாக இவற்றை விட மிகச் சிறந்த வேறு இரண்டு நாட்களை மாற்றாக வழங்கியுள்ளான்; அவைதான் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் ஆகும்" என்று கூறினார்கள்' (நூல்: ஸுனனு அபு தாவூத்(1134) அல்பானி அவர்களால் 'ஸஹீஹ் ஸுனன் அபீ தாவூத்'தில் ஆதாரப்பூர்வமானது எனச் சான்றளிக்கப்பட்டுள்ளது).

"ஒருவேளை பெருநாட்களைக் கொண்டாடுவது என்பது வெறும் உலகியல் வழக்கமாகவும், வழிபாட்டுடன் எவ்விதத் தொடர்புமற்றதாகவும், மாற்று மதத்தினருக்கு ஒப்பாக நடக்கும் செயலுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்திருந்தால்—அனுமதிக்கப்பட்ட விளையாட்டு, வேடிக்கை மற்றும் மகிழ்ச்சிகளில் எவ்விதத் தவறும் இல்லை என்பதால்—நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அந்த இரண்டு நாட்களிலும் தொடர்ந்து விளையாடி மகிழ அனுமதித்திருப்பார்கள்.

எந்தவொரு குறிப்பிட்ட வழிபாட்டிலோ இறைநெருக்கத்தை நாடிச் செய்யப்படும் எந்தவொரு செயலும் செய்யப்படாத, வெறும் விளையாட்டு நோக்கில் கொண்டாடிய ஒரு பெருநாளையே நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தடை செய்துள்ளார்கள் என்றால்; இறைநெருக்கத்தை நாடியும், வழிபாட்டு அடிப்படையிலும், அதனோடு பிணைக்கப்பட்டு அதன் மீதே கட்டமைக்கப்பட்டுச் செய்யப்படும் ஒரு கொண்டாட்டத்தின் நிலை நபியவர்களின் பார்வை என்னவாகயிருந்திருக்கும் என்பது மிகவும் தெளிவான விடயம். அதனை நபியவர்களின் பின்வரும் பொன்மொழி சுட்டிக்காட்டுகிறது; [யார் எங்களுடைய விடயத்திலே மார்க்கத்திலே அதிலே இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கி செய்கிறாரோ அது நிராகரிக்கப்பட்ட விடயமாகும்.].  (நூட்கள்: ஸஹீஹுல் புஹாரி 2697, ஸஹீஹுல் முஸ்லிம் 1718).

மூலநூட்கள்

பித்ஆ

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android