முதலாவதாக: அபூ கதாதா அல்-அன்சாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்ட போது, அவர்கள்: '(ஏனெனில்) அந்த நாளில்தான் நான் பிறந்தேன்; மேலும், அந்த நாளில்தான் எனக்கு முதன்முதலில் வஹி (இறைச்செய்தி) அருளப்பட்டது' என்று பதிலளித்தார்கள். (நூல்: ஸஹீஹு முஸ்லிம் (ஹதீஸ் எண்: 1162).
அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (மனிதர்களின்) நற்செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன; எனவே, என்னுடைய நற்செயல்கள் சமர்ப்பிக்கப்படும் போது நான் நோன்பாளியாக இருப்பதை நான் அதிகம் விரும்புகிறேன்.
இமாம் திர்மிதீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இந்த ஹதீஸை தங்களது நூல் தொகுப்பில் (ஹதீஸ் எண்: 747) பதிவு செய்து, அதனை ஹஸன் (நம்பகமானது) என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த ஹதீஸை இமாம் அல்பானி அவர்கள் 'ஸஹீஹ் அத்-திர்மிதீ' நூலில் ஸஹீஹ் என உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
மேற்குறிப்பிட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மூலம் தெளிவாக விளங்குவது என்னவென்றால்: நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தான் பிறந்த நாளுக்கு நன்றி செலுத்தும் விதமாக திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்றதைப் போலவே, அந்த நாளின் இதர சிறப்புகளுக்காகவும் நோன்பு நோற்றுள்ளார்கள். அதாவது, அந்த நாளில்தான் அவர்களுக்கு வஹி (இறைச்செய்தி) அருளப்பட்டது; மேலும், அந்த நாளில்தான் மனிதர்களின் நற்செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே, தனது நற்செயல்கள் சமர்ப்பிக்கப்படும் போது தான் நோன்பாளியாக இருக்க வேண்டும் என்றே நபியவர்கள் விரும்பினார்கள். ஆகவே, நபியவர்கள் திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்றதற்கு அவர்களின் பிறப்பு என்பது பல காரணங்களில் ஒரு காரணமாக மட்டுமே அமைந்திருந்தது.
எனவே, எவர் ஒருவர் நபியவர்கள் நோன்பு நோற்றதைப் போலவே ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்று, அதில் பாவமன்னிப்பை எதிர்பார்த்து, மேலும் அல்லாஹ் தன் அடியார்களுக்கு அந்நாளில் புரிந்த அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்துகிறாரோ - அவ்வருட்கொடைகளில் மிக மகத்தானது அல்லாஹ் தன் அடியார்களுக்குத் தனது நபியின் பிறப்பையும், அவர்களின் தூதுத்துவத்தையும் அருளியதாகும் - அத்தகைய செயல் மிகவும் உன்னதமானதும், நபியவர்களின் ஆதாரப்பூர்வமான சுன்னாவிற்கு முற்றிலும் ஒத்துப் போகக்கூடியதுமாகும். ஆனால், இந்த வாராந்திர நோன்பை ஒரு குறிப்பிட்ட வாரத்திற்கு மட்டுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கு மட்டுமோ பிரத்தியேகமாகச் சுருக்கிக் கொள்ளக் கூடாது; மாறாக, தனது வாழ்நாள் முழுவதும் தன்னால் இயன்றவரை அனைத்து வாரங்களிலும் திங்கட்கிழமை நோன்பை நோற்று வர வேண்டும்.
ஆனால், நபியவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில், வருடத்தில் வரக்கூடிய ஒரு குறிப்பிட்ட நாளை மட்டும் தேர்ந்தெடுத்து (ரபியுல் அவ்வல் 12 போன்ற தேதியில்) பிரத்தியேகமாக நோன்பு நோற்பது என்பது, நபியவர்களின் சுன்னாவிற்கு முரணான ஒரு மார்க்கப் புதுமையே (பித்அத்தே) ஆகும். ஏனெனில், நபியவர்கள் வாராந்திர அடிப்படையில் திங்கட்கிழமையன்று மட்டுமே நோன்பு நோற்றார்கள்; ஆனால், வருடாந்திர அடிப்படையில் அவர்கள் பிறந்ததாகக் கருதப்படும் அந்த ஒரு குறிப்பிட்ட தேதி திங்கட்கிழமையிலும் வரலாம் அல்லது வாரத்தின் இதர நாட்களிலும் வரலாம் (அப்படியிருக்க தேதியைத் தேர்ந்தெடுப்பது பித்அத்தாகும்).
இரண்டாவதாக: இன்று மக்களிடையே பரவலாகக் காணப்படக்கூடிய, அவர்களது 'பிறந்தநாள் விழா' என்று அழைக்கக்கூடிய பழக்கவழக்கங்களும், அதனை அவர்கள் கொண்டாடும் முறைகளும் - மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் இல்லாத ஒரு மார்க்கப் புதுமையே (பித்அத்தே) ஆகும். ஏனெனில், முஸ்லிம்கள் கொண்டாடுவதற்கு நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களைத் தவிர வேறு எந்தவொரு பெருநாட்களும் இஸ்லாத்தில் இல்லை.
அடுத்து, அல்லாஹ் தன் திருக்குர்ஆனில், {அகிலத்தார் அனைவருக்கும் ஓர் அருட்கொடையாகவே அன்றி நாம் உம்மை அனுப்பவில்லை} (அல்-அன்பியா:107) என்று கூறிய, முழு மனிதகுலத்திற்கும் உண்மையான அருட்கொடையாகவும், பொதுவான பேரருளாகவும் மற்றும் நலவுகளின் வாயிலாக திகழக்கூடிய நமது நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறப்பை எவ்வாறு சாதாரண மனிதர்களுடன் ஒப்பிட முடியும்.?!(அவை இரண்டும் எவ்விதத்திலும் சமமாகாது).
அப்படியானால், அவருடைய தோழர்களும் (ஸஹாபாக்கள்) சாலிஹான முன்னோடிகளும் ஏன் இந்தச் செயலைச் செய்யவில்லை?
நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வாரந்தோறும் தான் பிறந்த நாளான திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்றார்கள் என்பதற்காக வாரத்தில், மாதத்தில் அல்லது வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்றோ அல்லது அந்த நாளை ஒரு பெருநாளாக மாற்றலாம் என்றோ நமக்கு முந்தைய ஸலஃபுகளோ (முன்னோர்களோ) அல்லது மார்க்க அறிஞர்களோ எவருமே கூறவில்லை; அவ்வாறு எவரிடமிருந்தும் எவ்வித ஆதாரமும் அறியப்படவில்லை. ஒருவேளை இச்செயல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட நற்காரியமாக இருந்திருந்தால், அனைத்து நன்மைகளின் பக்கமும் நம்மை விட விரைந்து செல்லக்கூடிய மார்க்க அறிஞர்களும் உன்னதச் சான்றோர்களும் இதனைச் செய்வதில் நம்மை விட முந்தியிருப்பார்கள். அவர்கள் இத்தகையதொரு செயலைச் செய்யவில்லை எனும் போதே, இது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட (பித்அத்தான) ஒரு காரியம் என்பதும், இதனைச் செயல்படுத்துவது எவ்விதத்திலும் அனுமதிக்கப்படாது என்பதும் தெளிவாக உறுதியாகிறது.