8

நபி(ஸல்) அவர்களின் தொழுகை முறை.

கேள்வி: 13340

: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை முறையை ஒழுங்குமுறையில்  தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

1. கிப்லாவை முன்னோக்குதல்.

ஒரு முஸ்லிம் தொழுகையை நாடினால் பர்ளான தொழுகையாக இருந்தாலும் சரி, நபிலாக இருந்தாலும் சரி, கிப்லாவை முன்னோக்குவது அவசியமாகும். கிப்லாவை முன்னோக்குவது தொழுகையில் அடிப்படை கடமைகளில்( ருக்னு) ஒன்றாகும். அது இன்றி தொழுகை நிறைவேறாது.

 கிப்லாவை முன்னோக்குவது அவசியமில்லாத சந்தர்ப்பங்கள்.

* பயத்தின் போதும் யுத்தத்தின் போதும்

 கிப்லாவை முன்னோக்குவது அவசியமில்லை.

* நோய், கப்பல், விமானம், தரைவழி வாகனம் மூலம் பிரயாணம் செய்யும் போதும், ஒருவர் தொழுகை நேரம் முடிவதை அஞ்சினால், கிப்லா திசையை முன்னோக்குவது அவசியம் இல்லை.

* நபிலான அல்லது வித்ரு தொழும் ஒருவர் பிரயாணம் செய்யும் போது ஆரம்ப தக்பீரை முடியுமாக இருந்தால் கிப்லாவை முன்னோக்கி கட்டுவது விரும்பத்தக்கதாகும். பின்பு அவர் பிரயாணம் செய்யும் திசையில் தொழுவது குற்றமில்லை.

* கஃபாவை கண்களால் பார்க்க முடியுமான ஒவ்வொருவருக்கும் கஃபாவை கிப்லாவாக முன்னோக்குவது கட்டாயமாகும். கண்களால் பார்க்க முடியாதவர்களுக்கு கஃபாவின் திசையை முன்னோக்கினால் மாத்திரம் போதுமானதாகும்.

 பிழையான திசையில் தொழும் தொழுகையின் சட்டம்.

தெரியாததின் காரணமாக அல்லது கிப்லா திசையை அடைய முயற்சி செய்து அடைய முடியாமல்,  கிப்லா திசையல்லாத திசையில் தொழுதால், அந்தத் தொழுகை சரியானதாகும். அதை மீட்டித் தொழ அவசியம் இல்லை.

5.  வேறு திசையில் தொழும் போது கிப்லாத்துசையை அறிந்த ஒருவர் வந்து கூறினால், கிப்லாத்திசையை உடனே முன்னோக்கித் தொழ வேண்டும். அந்த தொழுகை சரியானதாகும்.

2. நிலையில் நிற்றல்

 6. நின்று நிலையில் தொழுவது கட்டாயமான ஒரு அடிப்படையாகும் பயத்தில் அல்லது யுத்தத்தில் தொழுபவர் அவரது வாகன ஏறியவராக தொழ முடியும் நோய் காரணமாக நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்து தொழுவார் அதுவும் முடியாதவர் ஒரு பக்கம் சாய்ந்து தொழுவார்.

 நபிலான தொழுகை தொழுபவர் அவர் விரும்பினால் உட்கார்ந்தும், வாகனத்திலும், தொழுவார்.

ருகூஃ, ஸுஜூதை தலையால்  குனிந்து  செய்வார்.  நோயாளி  ஸுஜூத் செய்வதை, ருகூஃ செய்வதை விட அதிகமாக குனிந்து செய்வார்.

2. உட்கார்ந்து தொழுபவர் தரையில் ஏதேனுமொன்றை வைத்து, அதன் மீது தொழுவது கூடாது.

அவர் தனது நெற்றியை தரையில் வைக்க முடியாதவராக  இருந்தால் ஸுஜூதை ருகூவை விட குனிந்து செய்ய வேண்டும்.

விமானம், கப்பல் போன்றவற்றில் தொழுகை.

8.கப்பலிலும், விமானத்திலும் பர்ளான தொழுகைகளை தொழ முடியும்.

 9. விழும் என்று அஞ்சினால் இவை இரண்டிலும் உட்கார்ந்தும் தொழ முடியும்.

10.  உடற்பலவீனம் அல்லது வயோதிபம் காரணத்தினால் தடியின் மீது அல்லது தூணின் மீது ஊன்றிய நிலையில் தொழ முடியும்.

 நின்றும் உட்கார்ந்தும் தொழுதல்

11. இரவுத் தொழுகையில் எவ்வித காரணமும் இன்றி நின்றும் உட்காந்தும் தொழ முடியும்.

உட்கார்ந்த நிலையில் ஓதித் தொழுது, ருஃகூ செய்ய சற்று முன்தாக எழுந்து, எஞ்சிய சில வசனங்களை நின்ற நிலையில் ஓதிவிட்டு, ருகூஃ மற்றும் சுஜூது செய்ய முடியும். பின்பு இரண்டாவது ரக்அத்தையும் இதே போன்ற தொழ முடியும்.

12.  உட்கார்ந்து தொழுதால் சம்மானமிட்டு தொழ முடியும். அல்லது இலேசான இருப்பு முறையில் தொழ முடியும்.

செருப்பு அணிந்து தொழுதல்.

13. செருப்பு அணியாமல் தொழ முடிவது போல செருப்பு அணிந்தும் தொழ முடியும்.

14.  ஒரு முறை செருப்பு அணிந்தும், மற்றொரு முறை செருப்பின்றியும் தொழுவது சிறந்ததாகும்.

 செருப்பணிந்து கொண்டே தொழுவதும், அணியாமலே தொழுதும் சிரமப்பட தேவையில்லை. தேவைக்கே இன்றி செருப்பணிந்து தொழுவதுடன் ஏனைய நேரங்களில் செருப்பு அணியாமல் வெறும் காலில் தொழுவது சிறந்ததாகும்.

 15.செருப்பு அணிந்து தொழுதால் அதை வலப்பக்கத்தில் கழட்டி வைப்பது கூடாது. இடப்பக்கத்தில் யாரும் தொழவில்லையானால் இடப்பக்கமாக கழற்றி வைக்க வேண்டும். இடப்பக்கம் யாரும் இருந்தால் தனது கால்களுக்கு இடையில் வைக்க வேண்டும். முன்னால் வைக்காமல் இருப்பதில் ஒரு அழகிய முன்மாதிரி இருக்கின்றது. என்னவென்றால் தொழுகையாளிகள் செருப்புகளை முன்னோக்கித் தொழுவதை தடுக்கும் ஒரு செயலாகும். இந்த செயல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும்.

மிம்பர் மீது தொழுதல்

16. மிம்பர் போன்ற உயர்ந்த இடத்திலிருந்து இமாம் மக்களுக்கு கற்றுக் கொடுக்க தொழுகை நடத்துவது ஆகுமாகும். நின்று தக்பீர் கட்டி, ஓதி ,மிம்பர் மீது ருகூஃ செய்து காட்டி, சுஜூத்  கீழறங்கி செய்ய வேண்டும். பின்பு இரண்டாவது ரக்அத்தையும் மிம்பர் மீதேறி தொழுகை நடத்த வேண்டும்.

சுத்ராவை நோக்கி நெருக்கமாக தொழுவதன் அவசியம்.

17. சிறிய பள்ளிவாசலாக இருந்தாலும் சரி பெரிய பள்ளிவாயலாக இருந்தாலும் சரி தொழும் போது சுத்ரா (தடை) வைத்து தொழுவது அவசியமாகும்." நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் சுத்ரா இன்றி தொழ வேண்டாம். ஒருவரையும் உமக்கு முன்னால் கடக்க விட வேண்டாம். மறுத்தால் அவனுடன் சண்டை செய். ஏனெனில் அவனுடன் ஷைத்தான் இருக்கின்றான்." 

18. நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கட்டளைப்படி சுத்ராவை நெருங்கி இருப்பது கட்டாயமாகும்.

19.  நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சுஜூத் செய்யும் இடத்திற்கும் அவர்களின் சுத்ராவான சுவருக்குமிடையில் ஒரு ஆடு செல்லும் அளவு இடைவெளியிருந்தது. எவர் இந்தளவு சுத்ராவிற்கு நெருக்கமாக தொழுவாரோ கடமை என அளவு நெருக்கத்தில் தொழுதுவிட்டார்.

நான் கூறுகின்றேன் சிரியாவிலே அதிகம் பள்ளிவாயில்களிலே தொழுகையின் போது அவதானித்த விடயம் யாரும் சுவரையோ அல்லது சுத்ராவை நோக்கி தொழுவதில்லை. இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டையில் அலட்சியமேயன்றி வேறில்லை.

சுத்ராவின் உயரம்

20. ஒரு சான் அல்லது இரண்டு சான் அளவு தரையில் இருந்து உயரமாக சுத்ரா இருப்பது அவசியமாகும்." நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நீங்கள் சுத்ரா வைப்பதாக இருந்தால் ஒட்டகத்தின் மீதுள்ள சாய்மான அளவு உயரமாக வைத்து தொழுங்கள். அதற்கு பின்னால் கடந்து செல்பவரை பொருட்படுத்தாதீர்கள்." (சாய்மான அளவு என்பது - ஒட்டகத்தின் பின்பகுதியில் சாய்வதற்காக வைக்கப்படும் ஒரு பலகை) குதிரையின் சேனம் போன்றதாகும். இந்த ஹதீஸில் ஒரு கோடி கீறிட்டு சுத்ராவாக பயன்படுத்துவது கூடாது என்பது தெளிவாகின்றது. கோடு பற்றி வந்த ஹதீஸும் பலவீனமானது.

21. சுத்ராவை நோக்கி நேரடியாக தொழ வேண்டும். ஏனெனில் சுத்ராவை வைத்து தொழுமாறு ஏவப்பட்ட ஹதீஸ் வெளிப்படையானதாகும். அதனை முன்னோக்காமல் வலதோ இடதோ திரும்பி தொழுவது அறியப்படவில்லை.

22.  பூமியில் நட்டப்பட்ட தடி அல்லது குழாய் அல்லது மரம் போன்றவற்றையும் கட்டிலில் சாய்ந்திருக்கும் தன் மனைவி அல்லது வாகனத்தையும் சுத்ராவாக கருதி தொழுவது கூடும்.

கப்ருகளை நோக்கி தொழுவது ஹராம் ஆகும்.

 23. கப்ருகளை முன்னோக்கி தொழுவது முற்றிலும் ஹராமாகும். அவை நபிமார்களின் கப்ருகளாக இருந்தாலும் சரியே.

தொழுபவருக்கு முன்னால் கடந்து செல்வது ஹராம் ஆகும் அது மஸ்ஜிதுல் ஹராமிலும் சரியே.

 24.எந்த பள்ளி வாயிலாக இருந்தாலும் தொழுபவருக்கு முன்னால் சுத்ரா இருக்கும்போது கடந்து செல்வது கூடாது. அது மஸ்ஜிதுல் ஹராமிலும் சரியே.

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "தொழுபவருக்கு முன்னால் கடந்து செல்வதின் விபரீதத்தை அறிந்தால் நாற்பது நாட்கள் அல்லது நாற்பது வருடங்கள் அப்படியே கடக்காமல் இருப்பது சிறப்பாக இருக்கும். (தொழுபவரின் சுஜுத் செய்யும் இடத்திற்கு முன்னால் கடந்து செல்வது)

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவாப் செய்யுமிடத்தில் ஓரத்தில் தொழும் போது சில மனிதர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடந்து சென்றனர் என்று வரும் செய்தி சரியானதும் இல்லை. அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  சுஜூத் செய்யும் இடத்திற்கு முன்னால் கடந்து சென்றதாகவும் இல்லை.

தொழுபவரை கடந்து செல்பவரை தடுப்பதன் அவசியம் அது மஸ்ஜிதுல் ஹராமிலும் இருந்தாலும் சரியே.

 25.சுத்ரா வைத்து தொழுபவர் தன்னை யாரையும் கடக்க விடக்கூடாது. மேற்கூறிய ஹதீஸில் உனக்கு முன்னால் யாரையும் கடக்க விடாதே ; மேலும் எவர் சுத்ரா வைத்து தொழுது வேறொருவர் தன்னை கடக்க முற்பட்டால் முடியுமான அளவு தடுக்கட்டும்.  இன்னொரு அறிவிப்பில் இரண்டு தடவை தடுக்கட்டும். அதையும் மறுத்து கடக்க முற்பட்டால் அவனை கொல்லட்டும். ஏனெனில் அவன் ஷைத்தான் ஆவான்.

கடப்பதை தடுக்க முன்னோக்கி சற்று நடத்தல்

26. பருவமடையாத பிள்ளை அல்லது ஒரு மிருகம் தொழும் போது குறுக்கே செல்ல நேர்ந்தால் ஒரு அடி அல்லது சற்று அதிகமாக முன்னோக்கி செல்லலாம்.

தொழுகையை துண்டிப்பவைகள்

27. தொழுபவருக்கு முன்னால் கடந்து சென்று தொழுகையை துண்டிப்பதிலிருந்து பாதுகாப்பதே சுத்ராவின் முக்கிய நோக்கமாகும்.

 மாறாக சுத்ரா இன்றி தொழுபவருக்கு முன்னால் ,ஒரு பெண் கடந்து சென்றாலோ அல்லது கழுதை, நாய், போன்றவைகள் கடந்து சென்றாலோ தொழுகை துண்டிக்கப்படும்.

3). நிய்யத்து வைத்தல்

28. தொழக்கூடியவர் தனது உள்ளத்தால் எந்த தொழுகையை தொழுவாரோ அதை நிய்யத்து வைப்பது அவசியமாகும்.

 பர்ள்  என்றால் பர்ள் என்றும், சுன்னத் என்றால் சுன்னத் என்றும், ழுஹர் அல்லது அஸர் என்று குறித்த தொழுகையை நிய்யத்து வைக்க வேண்டும்.

 இது அடிப்படை கடமை (ருக்னு) ஆகும். அல்லது நிபந்தனையாகும்.

 ஆனால் நிய்யத்தை மொழிவது பித்அத் ஆகும்.

இமாம்களை பின்துயர்ந்தவர்கள் எவரும் இதைக் கூறவே இல்லை.

 தக்பீர் சொல்லுதல் அல்லது கட்டுதல்

29. பின்பு அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறி தொழுகையை ஆரம்பிப்பது அடிப்படை கடமை ஆகும்.

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் தொழுகையின் சாவி சுத்தமாகும். அதன் நுழைவு தக்பீர் ஆகும். அதன் முடிவு சலாம் ஆகும். நுழைவு என்பது தொழுகையின் செயல்கள் அல்லாதவைகளை தடுப்பதும், முடிவு என்பது அந்த செயல்களை ஆகுமாக்குவதுமாகும்.

30.  இமாமைத் தவிர வேறெவரும் தக்பீரை சத்தமாக கூறக்கூடாது.

 அதிகமாக தொழுகையாளிகள் இருப்பதாலோ அல்லது இமாம் சத்தம் குன்றியவராக இருந்தாலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால், முஅதின் சப்தத்தை உயர்த்தி எல்லோருக்கும் கேட்கச் செய்வது ஆகுமாகும்.

32. இமாம் தக்பீர் கூறிய பின்பே மஃமூம்களும் தக்பீர் கூற வேண்டும்.

 தக்பீருக்காக கைகளை உயர்த்தும் முறை

33. தக்பீர் கூறுவதற்கு முன்பு அல்லது பின்பு இரு கைகளையும் உயர்த்த வேண்டும்.

 34. கைவிரல்களை விரித்த வண்ணம் உயர்த்த வேண்டும்.

 35. தோள் புஜத்தின் அளவு அல்லது காதின் அளவு உயர்த்த வேண்டும். காதில் சோனைகளை இரு கட்டை விரல்களால் தொடுவதற்கு மார்க்கத்தில் எந்த அடிப்படையும் இல்லை. மாறாக அது சைத்தானின் ஊசலாட்டமேயாகும் என கூறுகின்றேன்.

 கைகளை வைக்கும் முறை

36. தக்பீர் கூறியதுடன் வலது கையை இடது கைக்கு மேலால் வைக்க வேண்டும். அது நபிமார்களின் வழிமுறையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இதை வலியுறுத்தியுள்ளார்கள். கைகளை தொங்க விடுவது கூடாத காரியமாகும்.

37. இடது உள்ளங்கையின் மேற்புரத்தை வலது உள்ளங்கையில் வைத்து மணிக்கட்டை பிடிக்க வேண்டும்.

38. மறுமுறை இடது கையை வலது கையால் பிடிக்க வேண்டும். இடது கையை வலது கையால் பிடிப்பதையும் அல்லது மேலால் வைப்பதையும் ஒரே நேரத்தில் செய்வது பிந்திய கால அறிஞர்கள் சிறந்ததாக கருதியிருந்தாலும் அதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

39.  இரு கைகளையும் நெஞ்சிலே மாத்திரம் வைக்க வேண்டும்.

 நெஞ்சில் அல்லாமல் வேறு இடத்தில் வைப்பது பலவீனமான அல்லது அடிப்படையற்ற கருத்தாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

40.  வலது கையை தொப்புளுக்கு கீழால் இடுப்பில் வைப்பது கூடாது.

 உள்ளச்சத்துடன் சுஜூத் செய்யும் இடத்தை நோக்குதல்.

 41. தொழுகையில் உள்ளச்சமாக இருப்பதுடன், தொழுகையை சீர்குலைக்கும்  காரியங்களை விட்டு தவிர்ந்திருக்க வேண்டும்.

 உணவை முன்னிலையில் வைத்தும், மலசலத்தை அடக்கிக் கொண்டும் தொழுவது கூடாது.

42.  நிலையில் நிற்கும் போது சுஜூத் செய்யும் இடத்தை நோக்க வேண்டும்.

43. அங்குமிங்கும் திரும்பக் கூடாது. அவ்வாறு திரும்புவது சைத்தானின் விளையாட்டாகும்.

44. வானத்தின் பக்கம் பார்வையை திருப்பக் கூடாது.

 ஆரம்ப துஆ [( துஆஉல் இஸ்திப்தாஹ்) பிரார்த்தனை]

45. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்ட சில சஹீஹான பிரார்த்தனைகளை ஓதி தொழுகையை ஆரம்பித்தல்.

 அவைகளில் பிரதானமான சுபஹானல்லாஹி سبحانك اللهم وبحمدك، وتبارك اسمك، وتعالى جدك، ولا إله غيرك என்ற துஆவை ஓதுதல்.

 வேறு துஆக்களை அறிய ...

[ஸிபத்து ஸலாஹ் என்ற நூலில் 91 முதல் 95 வரை பக்கங்களை பார்க்கவும்.]

ஓதுதல்

46.  அல்லாஹ்விடத்தில் சைத்தானை விட்டும் பாதுகாவல் தேடி அஊது பில்லா கூறுதல்.

47. "அஊது பில்லாஹி  மினஷ் ஷைதானிர்ரஜீம்" மின் ஹம்ஸிஹீ,  வநப்ஹிஹீ வநபஸிஹீ  என்று சில தடவையும் கூறலாம்.

வநபஸ்  என்பது தீய ஊசலாட்டங்கள் ஆகும்.

48. அஊது பில்லாஹி  ஸமீஇல்  அழீம் மினஷ் ஷைதானிர்ரஜீம் என்று கூறுவதும் சுன்னாவாகும்.

49. மௌனமாக பிஸ்மில்லாஹ்வை எல்லா தொழுகையிலும் கூற வேண்டும்.

சூரா பாத்திஹா ஓதல்

 50.பின்பு சூரா பாத்திஹாவை முழுமையாக ஓத வேண்டும்.

 பிஸ்மில்லாஹ்வும் அதன் ஒரு வசனமாகும். இது அடிப்படை கடமையாகும். ஃபாத்திஹா இன்றி தொழுகை நிறைவேறாது. அரபியல்லாதவர்கள் பாத்திஹாவை மனனமிடுவது கட்டாயமாகும்.

51. பாத்திஹா ஓத முடியாதவர்கள் சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ் போன்ற திக்ர்களை ஓத வேண்டும்.

52. சூரா பாத்திஹாவின் ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்தி நிறுத்தி ஓதுவது சுன்னாவாகும். பிஸ்மில்லாஹ் கூறிவிட்டு நிறுத்த வேண்டும். பின்பு அல்ஹம்துலில்லாஹ் கூற வேண்டும். இவ்வாறு இறுதிவரை நிறுத்தி நிறுத்தி ஓத வேண்டும். இவ்வாறு தான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா வசனங்களையும்   நிறுத்தி நிதானமாக ஓதினார்கள்.

53.மாலிகி என்று நீட்டியும் மலிகி என்று சுருக்கியும் ஓத முடியும்.

இமாமை பின் துயர்பவர் சூரா பாத்திஹா ஓதும் முறை

54.  இமாமை பின்பற்றுபவர்  எல்லா தொழுகையிலும் இமாம் ஓதுவது கேட்காமல் இருந்தால் அல்லது இமாம் பாத்திஹா ஓதியதன் பின்னால் சிறிது மௌனமாக இருக்கும் வேளையில் மெதுவாக ஓத வேண்டும்.

 இவ்வாறு இமாம் மௌனமாக இருப்பது சுன்னாவில் செய்தி இடம்பெறவில்லையானாலும், ஸில்ஸிலது அஹாதீஸ் அழ்ழஈபா என்ற ஹதீஸ் தொடரில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது.

[ 546, 547 -  இரண்டாம் பாகம் 24 -  26 ஆம் பக்கங்கள், தாருல் மஆரிப் பதிப்பு ]

பாதிஹாவுக்கு பின் வேறு சூராக்கள் ஓதல்

 55. பாதிஹா ஓதியதன் பின்னால் வேறு ஒரு சூராவை அல்லது சில வசனங்களை ஓதுவது சுன்னாவாகும். ஜனாஸா தொழுகையிலும் சரியே.

 56. சில பொழுதுகள் நீட்டியும் சில பொழுதுகள் சுகயினம் அல்லது பயணம் அல்லது பிள்ளை அழுதல் போன்ற காரணங்களுக்காக சுருக்கியும் ஓத முடியும்.

57. தொழுகைகளுகமைய ஓதுவது வேறுபடும். சுபஹ் தொழுகையில் மிக நீளமாகவும், ழுஹர் தொழுகையில் அதைவிட சற்று குறைவாகவும், இஷா மற்றும் அஸர் தொழுகையில் அதைவிட குறைவாகவும், மஃரிப் தொழுகையில் மிகக் குறைவாகவும் ஓத வேண்டும்.

58.  பர்ளான தொழுககளை விட இரவுத்தொழுகைகளில் நீளமாக ஓத வேண்டும்.

59.  இரண்டாவது ரக்அத்தில் ஓதும் அளவைவிட முதலாவது ரக்அத்தில் அதிகமாக ஓத வேண்டும்.

60.  முதல் இரண்டு ரக்அத்துக்களை விட பின் இரண்டு ரக்அத்துக்களில் பாதி அளவு சுருக்கி ஓத வேண்டும்.

(இது பற்றி மேலதிக தெளிவுகளுக்கு ஸிபத்துஸ்ஸலாஹ் 102ம் ஆம் பக்கம்)

61. எல்லா ரக்அத்துக்களிலும் பாதிஹா ஓதுவது (கட்டாயம்) வாஜிபாகும்.

62.  சிலவேளை இறுதி இரண்டு ரக்அத்துகளிலும் பாத்திஹாவை விட சற்று அதிகமாக ஓதுவது சுன்னாவாகும்.

63. சுன்னாவிற்கு மாற்றமாக இமாம் நீளமாக ஓதுவது கூடாது. ஏனெனில் வயது முதிர்ந்தோர், பாலூட்டும் தாய்மார், நோயாளி, தேவையுடையோர் போன்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

சத்தமாகவும் மெதுவாகவும் ஓதல்.

 64.சுபஹ், ஜும்மா, பெருநாள் தொழுகைகள், கிரகணத் தொழுகைகள், மழை வேண்டித்தொழும் தொழுகை, மற்றும் இஷா, மஃரிப் தொழுகைகளில் சத்தமாக ஓத வேண்டும்.

 சூரா பாத்திஹா மற்றும் வேறு சூராவை ழுஹர், அஸர், மஃரிப் தொழுகையின் மூன்றாவது ரக்அத், இஷாவின் இறுதி இரண்டு ரக்காத்துகளிலும் மெதுவாக ஓத வேண்டும்.

65. சிலவேளை இமாம் மெதுவாக ஓதும் தொழுகைகளில் , அவர் ஓதுவதை மஃமூம்களுக்கு கேட்கச் செய்வார்.

66. வித்ரு, இரவுத் தொழுகைகளில் சிலவேளை சத்தம் உயர்த்தியும், சிலவேளை நடுநிலையாகவும், சில வேலை மெதுவாகவும் ஓதலாம்.

 67. குர்ஆனை ஓதும் போது தஜ்வீத் சட்டங்களை பேணி அழகிய தொணியில் எல்லா எழுத்துக்களும் தெளிவாக விளங்கும் அளவு அவசரமில்லாமலும் மிக அமைதியாக இல்லாமலும் சாதாரண முறையில் ஓதுவது சுன்னாவாகும்.

இமாம் தவறும் பட்சத்தில் இமாமுக்கு திருத்திக் கொடுத்தல்

68. இமாம் ஓதும்போது தவறுதலாக நா உளறினால் அவரது தவறை சுட்டிக்காட்டி திருத்தி கொடுத்தல் ஆகுமாகும்.

 ருகூஃ செய்தல்

69. ஓதி முடிந்ததன் பின் சற்று அமைதியாக இருக்க வேண்டும்.

70. பின்பு தக்பீர் இஹ்ராமில் கூறியபடி கைகளை உயர்த்த வேண்டும்.

71. பின்பு தக்பீர் கூற வேண்டும். இது வாஜிபாகும்.

72. எல்லா உறுப்புகளும் அசையாமல் இருக்கும் அளவு ருகூஃ செய்ய வேண்டும்.

 ருகூஃ  செய்யும் முறை

73. கைவிரல்களை விரித்து முழங்காலை கவ்வி பிடிக்க வேண்டும்.

74. நீரூற்றினாலும் அசையாதளவு நேராக முதுகை சமாந்தரமாக வைக்க வேண்டும்.

75. தலையை தாழ்த்தாமலும் உயர்த்தாமலும் முதுகுக்கு நேராக வைக்க வேண்டும்.

76. இரு முழங்கைகளிலும் உடம்பிலிருந்து அகற்றி வைக்க வேண்டும்.

77. சுப்ஹான ரப்பி அல் அழீம் என்ற திக்ரை மூன்று தடவை அல்லது அதிகமாக ருகூஃவிலே கூறுதல்.  அதேபோல் சுருக்கமாகவும் விரிவாகவும் வேறு சில திக்ர்களும் உள்ளன.

( தாருல் மஆரிப் பதிப்பகத்தின் ஸிபதுஸ்ஸலாஹ்  புத்தகத்தை பார்க்க, 132 ஆம் பக்கம்)

78. எல்லா நிலைகளிலும் சமமாக தரிப்பது சுன்னாவாகும்.

நிலையில் நிற்றல், ருகூஃ, நடுநிலை போன்றவைகளும்,  சுஜூத், நடு இருப்புகளிலும் சமமாக தரிப்பதுமாகும்.

79. ருகூவிலும் சுஜூதிலும் குர்ஆன் ஓதுவது கூடாது.

 ருகூஃவிலிருந்து நிலைக்கு வருதல்

80. முதுகை நிமிர்த்தி நிலைக்கு வருதல் ஒரு அடிப்படை (ருக்னு) ஆகும்.

81. நிலைக்கு வரும்போது "ஸமி அல்லாஹ் லிமன் ஹமிதா" என்று கூறுவது (வாஜிப்) கடமையாகும்.

82.  முன்பு தக்பீரத்துல் இஹ்ராமில் கூறியபடி இரு கைகளையும் நிலைக்கு வரும்போது உயர்த்த வேண்டும்.

83.  எல்லா உறுப்புகளும் அமைதியாக அசையாதவாறு நிலைக்கு வருதல்.

84. இந்நிலையில் ரப்பனா வலகல்ஹம்து என்று கூறவேண்டும்.

 வேறு திக்ருகளும் உள்ளன.[ பார்க்க ஸிபத்துஸ்ஸலாஹ் 135 ஆம் பக்கம்]

 இவ்வாறு கூறுவது இமாம்,மஃமூம் எல்லோருக்கும் கடமை ஆகும்.

 நிலைக்கு வரும்போது கூறும் கடமையான திக்ராகும். இந்நிலையில் கைகளை கட்டுவது கடமை இல்லை. மேலதிக விளக்கங்களுக்கு....

[ஸிபத்துஸ்ஸலாஹ் கிப்லாவை முன்னோக்குதல் பகுதி]

 85. ருகூவிலும் நடுநிலையிலும் ஒரே சம அளவில் தரிக்க வேண்டும்.

 சுஜூது செய்தல் (சிரம் பணிதல்)

86. கட்டாயமாக அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்.

87. சிலவேளை கைகளை உயர்த்தலாம்.

கைகளை ஊன்றி  குனிதல்.

88. சுஜூதிற்கு செல்லும் போது முழங்காலை தரையில் வைக்க முன்பு இரு கைகளையும் வைத்து சுஜூது செய்ய வேண்டும். இதுவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய முறையாகும். அதேபோன்று ஒட்டகம் குனிவதைப் போன்று சுஜூது செய்வதையும் தடுத்தார்கள்.

89. இரு உள்ளங்கைகளையும் விரி விரித்தவாறு சுஜூது இருப்பது அடிப்படை (ருக்னு) ஆகும்.

90. விரல்களை சேர்த்து வைக்க வேண்டும்.

91. விரல்களை கிப்லா திசையில் வைக்க வேண்டும்.

 92. தோள் புஜத்திற்குக்கு நேராக உள்ளங்கைகளை வைக்க வேண்டும்.

93. சிலவேளை காதுகளுக்கு நேராக வைக்கலாம்.

94. முழங்கைகளை தரையில் படுத்தாமல் உயர்த்தி வைக்க வேண்டும்.

95. மூக்கும் நெற்றியும் தரையில் படுதல்.

96. முழங்கால்களும் தரையில் படுதல்.

97. பாதங்களின் முன் ஓரங்களும் தரையில் படுதல்.

98. பாதங்களை நிமிர்த்தி நட்டி வைக்க வேண்டும்.

இவை அனைத்தும் (வாஜிப்) கடமையாகும்.

 99. கால் விரல்களை கிப்லாத்திசையில்  இருத்தல்.

100. குதிகால்களை சேர்த்து வைக்க வேண்டும்.

 சுஜூதின் அமைப்பு

101.  சுஜூதின் எல்லா உறுப்புகளும் சரிசமமாக இருக்குமாறு சுஜூத் அமைதல் அவசியமாகும்.

 சுஜூதின் உறுப்புகள்

 நெற்றி      

 மூக்கு

 உள்ளங்கைகள் முழங்கால்கள் பாதத்தில் உட்பகுதிகள்.

102. எவர் இவ்வாறு சுஜூத் செய்வாரோ, அவர் அமைதியாக சுஜூது செய்துவிட்டார்.

 சுஜூதில் அமைதியாக இருப்பது ஒரு அடிப்படை (ருக்னு) ஆகும்.

103. மூன்று முறை அல்லது அதிகமாக சுப்ஹான ரப்பீ அல் அஃலா என்று கூறுதல். வேறு திக்ருகளும் உள்ளன.

[பார்க்க. ஸிபத்துஸலாஹ் 145ம் பக்கம்]

104.  சுஜூதில் அதிகம் துவா செய்வது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் சுஜூத் துஆ அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பமாகும்.

105.  ருகூவில் தரித்ததை போன்று சுஜூதிலும் தரிக்க வேண்டும்.

106. தரையிலும் அல்லது ஆடை அல்லது விரிப்பு, பாய் போன்றவைகளிலும் சுஜூது செய்யலாம்.

107. சுஜூதில் குர்ஆன் ஓதுவது கூடாது.

108. பின்பு தக்பீர் கூறியவாறு தலையை உயர்த்த வேண்டும்.

109. சிலவேளை கைகளை உயர்த்தலாம்.

110. எல்லா உறுப்புகளும் அமைதியாக அசையாதவாறு நடுஇருப்பில் அமர வேண்டும்.

111. இடது காலில் அமர்ந்து இப்திராஷ் உடைய இருப்பு உட்காருவது வாஜிப் ஆகும்.

112. வலது காலை நட்டி வைக்க வேண்டும்.

113. வலது காலின் விரல்கள் கிப்லாவை நோக்கி இருக்க வேண்டும்.

114. இரு குதிகால்களில் அமர்வது சிலவேளை ஆகுமாகும்.

115.  ரப்பீஃ பிர்லி, வர்ஹம்னீ, வஜ்புர்னீ, வர்பஃனீ, வஆபினீ, வர்ஸுக்னீ என்ற திக்ரை ஓதல்.

116. " ரப்பி பிர்லி" என்று மாத்திரமும் கூற முடியும்.

117.  சுஜூதை போன்று சற்று இந்த இருப்பிலே தாமதிக்க வேண்டும்.

 இரண்டாவது சுஜூது

118. பின்பு தக்பீர் கூறல்.

119. சிலவேளை கைகளை உயர்த்தல்.

120. இரண்டாவது சுஜூது செய்தல்.

121. முதலாவது சுஜூதில் செய்ததைப் போன்று இரண்டாவதிலும் செய்தல்.

  ஓய்வின் அமர்வு (ஜல்சத்துல் இஸ்திராஹ்)

122. இரண்டாவது சுஜூதில் இருந்து தலையை உயர்த்தி இரண்டாவது ரக்அத்திற்கு எழும்போது தக்பீர் கூறுவது வாஜிபாகும்.

123. சில சமயம் கைகளை உயர்த்தலாம்.

124. எல்லா உறுப்புகளும் அமைதியாக அசையாதவாறு இடது காலில் இப்திராஷுடைய இருப்பு உட்காருதல்.

125. இரண்டாவது ரக்ஆத்திற்கு இரு கைகளையும் மடக்கி முஷ்டியால் தரையில் ஊன்றி எழும்புதல்.

126. முதலாவது ரக்அத்தில் செய்த எல்லா செயல்களையும் இரண்டாவது ரக்அத்திலும் செய்தல்.

127. துஆ இஸ்திப்தாஹ்வை தவிர.

 128.இரண்டாவது ரக்அத்து முதலாவது ரக்அத்தை விட குறுகியதாக இருத்தல்.

தஷஹ்ஹுத்திற்கு அமருதல். (அத்தஹிய்யாத்).

129. இரண்டாவது ரக்அத் முடிந்தால், அத்தஹிய்யாதிற்கு அமருவது வாஜிபாகும்.

130. இப்திராஷுடைய இருப்பு உட்காருதல்.

 131.குதிகாலில் உட்காருவது கூடாது.

132. வலது உள்ளங்கையை வலது தொடையின் முழங்காலில் வைத்து வலது முழங்கை, தொடையுடன் இருத்தல்

133. இடது உள்ளங்கையை விரித்து இடது முழங்காலில் வைத்தல்.

134.கைகளில் ஊன்றி அமருவது கூடாது. குறிப்பாக இடது கையை ஊன்றுவது கூடவே கூடாது.

விரலசைப்பதும் அதனை நோக்குதலும்.

135. வலது கைவிரல்களை மடக்கி, கட்டை விரலையும், நடு விரலையும் இணைத்தல்.

136. சில சமயம் ஒரு வட்டம் போல் அமைத்தல்.

137. ஆட்காட்டி விரலை கிப்லா திசையை நோக்கி நீட்டுதல்.

138. ஆட்காட்டி விரலை நோக்குதல்

139. அத்தஹிய்யாத் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆட்காட்டி விரலை அசைத்தல்

140. இடது ஆட்காட்டி விரலை நீட்ட முடியாது.

141. இந்த முறையில் எல்லா அத்தஹிய்யாத்திலும் செய்தல்.

தஷஹ்ஹுத் மற்றும் அதற்குப்பின் துஆ ஓதல்.

 142. தஷஹ்ஹுத் வாஜிபாகும்.  அது தவறும் பட்சத்தில் இரு சஜ்தாக்கள் மறதிக்காக செய்ய வேண்டும்

143. மெதுவாக ஓத வேண்டும்.

144. அத்தஹிய்யாது, லில்லாஹி,  التحيات لله، والصلوات والطيبات، السلام عليك أيها النبي، ورحمة الله وبركاته، السلام علينا، وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله

145. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும்

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم , إنك حميد مجيد , اللهم بارك على محمد  وعلى آل محمد , كما باركت على إبراهيم وعلى آل إبراهيم , إنك حميد مجيد

146. சுருக்கமாக கூறினால் اللهم صل على محمد , وعلى آل محمد , وبارك على محمد وعلى آل محمد , كما صليت وباركت على إبراهيم , وعلى آل إبراهيم , إنك حميد مجيد ) .

147.பின்பு ஹதீஸ்களில் கூறப்பட்ட துஆக்களில் விரும்பியதை தேர்ந்து ஓதலாம்.

மூன்றாவது நான்காவது ரக்அத்துக்கள்

148.தக்பீர் கூறுவது வாஜிபாகும். அதை உட்கார்ந்து கூறுவது சுன்னாவாகும்.

 149. சில சமயம் கைகளை உயர்த்தலாம்

150. அடுத்த அடிப்படையாகிய (ருக்னு) மூன்றாவது ரக்அத்துக்கு எழும்புதல்.

151. நான்காவது ரக்அத்திற்கு எழும்பும்போதும் அவ்வாறே செய்ய வேண்டும்

152. நான்காவது ரக்அத்திற்கு எழும்போது இப்திராஷுடைய இருப்பு உட்கார்ந்துவிட்டு,

153.இரண்டாவது ரக்அத்துக்கு எழுவதைப் போன்று இரு கைகளையும் ஊன்றி எழ வேண்டும்.

 154. மூன்றாவது, நான்காவது ரக்அத்துகளில் சூரா பாத்திஹா ஓதுவது வாஜிபாகும்

155. அதன் பின் வேறு சில வசனங்களை ஓதுதல்.

குனூத் நாசிலா (பிரச்சனைகளுக்கான) மற்றும் அது ஓதப்படும் சந்தர்ப்பமும்.

156. முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்காக பிரார்த்தனை செய்து குனூத் ஓதுவது சுன்னாவாகும்.

157. ருகூஃவிற்கு பின் ரப்பனா வழகல்ஹம்து என்று கூறிய பின் குனூத்து ஓதப்படும் சந்தர்ப்பமாகும்.

 158.துன்பத்திற்கு ஏற்றவாறு துஆவை அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக ஒரு குறித்த துஆ இல்லை.

159. இரு கைகளையும் உயர்த்தி துஆ கேட்க வேண்டும்

 160.இமாம் சப்தமாக உரத்து ஓத வேண்டும்

161. மஃமூம்ககள் ஆமீன் கூற வேண்டும்.

162. குனூத் ஓதி முடித்ததும் தக்பீர் கூறி சுஜூத் செய்தல்.

வித்ருடைய குனூத், அதன் வடிவம், மற்றும் இடம்

163. சிலவேளை வித்ருடைய குனூத் கடமையாக்கப்படும்.

164. குனூத் நாஸிலாவிற்கு மாற்றமாக ருகூஃவிற்கு முன்பதாக ஓத வேண்டும்.

165. பின்வரும் துஆவை ஓத வேண்டும்.............

اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت , وتولني فيمن توليت , وبارك لي فيما أعطيت , وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت , ولا منجا منك إلا إليك

 166. இந்த துஆ ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்களுக்கு கற்றுக் கொடுத்து, சஹாபாக்கள் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட துஆவாகும்.

167.அதன்பின் ருகூஃ செய்து சுஜூதும் செய்ய வேண்டும்.

இறுதி தஷஹ்ஹுத்  (இறுதி அத்தஹிய்யாத்) மற்றும் அதன் இருப்பு முறை.

168. இறுதி அத்தஹியத்துக்கு அமருதல்

169.  முதல் அத்தஹிய்யாத்தில் செய்தவைகளை செய்தல்.

170. இதில் தவர்ருக் இருப்பு உட்காருதல்.

தவர்ருக் இருப்பு என்பது இடது காலை வலது கெண்டை காலுக்கு கீழால் வைத்து அமருதல்.

171. வலது பாதத்தை நட்டி வைத்தல்.

172.சில சமயம் வலது பாதத்தை விரித்து வைத்தல்.

173.இடது உள்ளங்கையால் முழங்காலை கவ்விப்பிடித்தல்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து சொல்லுதல் மற்றும் நான்கு விடயங்களில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடல்.

174.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சலவாத்து சொல்லுவது (கட்டாயம்) வாஜிப்பாகும். முதலாவது தஷஹ்ஹுத்தில் சில வடிவங்களை குறிப்பிட்டோம்.

175. பின்பு நான்கு விடயங்களை விட்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேட வேண்டும்.

யா அல்லாஹ் உன்னிடத்தில் நரக வேதனை, கப்ரின் வேதனை, வாழ்வின் பிரச்சனைகள், மரணத்தின் பின்னுள்ள பிரச்சனைகள், மற்றும் மஸீஹு தஜ்ஜாலின் பிரச்சினைகளில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன்.

 வாழ்வின் பிரச்சினை என்பது உலகிலே மனிதனுக்கு இச்சைகளினால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகும்

மரணத்தின் பிரச்சினைகள் என்பது கப்ரின் நெருக்கடிகள் மற்றும் மலக்குமார்களின் கேள்வி கணக்கு நெருக்கடிகள் ஆகும்.

தஜ்ஜாலின் பிரச்சனைகள் தஜ்ஜாலின் வழிகேட்டு பிரச்சாரத்தில் அவன் வெளிப்படுத்தும் அதிசயங்களினால் அவனை இறைவனாக ஏற்றுக் கொள்ளும் வழிகேட்டு பிரச்சனைகள்.

சலாம் கொடுக்க முன் து கேட்டல்

176. பின்பு சலாம் கொடுக்க முன்பு குர்ஆன் சுன்னாவில் இடம் பெற்றுள்ள துஆக்கள் அல்லது இலகுவான வேறு துஆக்களை தனக்காக கேட்டல்.

சலாம் கொடுக்கும் முறைகள்

 177.வலது கன்னம் தெரியும் வரை வலது பக்கம் திரும்பி ஸலாம் கொடுத்தல். இது அடிப்படை (ருக்னு) ஆகும்.

178. இடது கன்னம் தெரியும் வரை இடது பக்கம் திரும்பி சலாம் கொடுத்தல்.

179. இமாம் சத்தமாக உரத்து சலாம் கூறுவார்.

180. பின்வரும் முறைகளில் சலாம் கொடுக்கப்படும். 1)அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ என்று வலது பக்கமும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி என்று இடது பக்கமும் சலாம் கொடுத்தல்.

2) அதேபோன்று வபரக்காத்துஹு என்று கூறும் சலாம் கொடுத்தல்.

3) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி என்று வலது பக்கமும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று இடது பக்கமும் சலாம் கொடுத்தல்.

4) வலது பக்கம் சற்று திரும்பி ஒரு சலாம் கொடுத்தல்.

 முஸ்லிம் சகோதரனே ! இது நான் அறிந்த வரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை முறையை சுருக்கமாகவும், தெளிவாகவும் உங்களுக்கு விளங்குமளவு கூறியுள்ளேன். இதேபோன்று உங்கள் தொழுகைகளை அமைத்துக் கொண்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய "நான் தொழுவதைப் போன்று நீங்களும் தொழுங்கள்" என்ற ஹதீஸின் கூற்றை அடைந்து உங்களது தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஆதரவு வைக்கிறேன்.

 பின்பு இந்த முறையில் தொழுகையை அமைப்பதோடு, உள்ளச்சத்துடனும், மன ஓர்மையுடனும் தொழுது கொள்ளுங்கள். உள்ளச்சமே தொழுகையின் நோக்கமாகும். இவ்வாறு உனது தொழுகையை அமைப்பதினால், தொழுகையினால் அல்லாஹ் குறிப்பிட்ட "மானக்கேடான விடயங்களை விட்டும் தொழுகை பாதுகாக்கும்" என்ற உயரிய பயனை பெற்றுக் கொள்வீர்கள்.

இறுதியாக எமது தொழுகைகளையும் ஏனைய நல்லமல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அதன் கூலிகளை அவனை சந்திக்கும் நாளில் பூரணமாக வழங்க அவனிடமே பிரார்த்திக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

மூலநூட்கள்

மூலம்

தக்பீர் முதல் ஸலாம் கொடுக்கும் வரை நபியவர்களின் தொழுகை முறை என்ற இமாம் அல்பானியின் நூலின் சுருக்க நூல்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android